[X] Close

நீட் தேவையா இல்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 15:34 pm
  • அ+ அ-

சேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள் அதிகாரம் அளிக்கப்ப்படும் என உறுதியளித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீட் பிரச்சினை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அவரது பேச்சை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மொழிபெயர்த்தார்.

ராகுல் காந்தி பேசியதாவது:

''இங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இந்த வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 2019 தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலாக இருக்கிறது.

பாஜக ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை முன்னெடுக்கிறது. இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பார்வைகள் இருக்கின்றன. இந்தப் பன்முகத்தன்மை ஒருங்கிணைந்ததுதான் இந்தியா என நம்புகிறோம். ஆனால், இந்த அடிப்படையை எதிர்க்கும் சித்தாந்தத்தை பாஜக முன்னிறுத்துகிறது. இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது.

அதிகாரப் பகிர்வு அவசியம்

பிரதமரின் அலுவலகம் தான் தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது பிரதமர் அலுவலக அதிகாரிகள் அல்ல. தமிழர்கள் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். இந்தியாவை வலுவான நாடாக நிலைநிறுத்த தமிழர்களின் குரல் அத்தியாவசியமானதாக உள்ளது.

அதற்கு மத்திய அரசிடமே எல்லா அதிகாரமும் குவிந்திருத்தல் கூடாது. அந்த அதிகாரப் பகிர்வைப் பற்றிதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அதனை வலியுறுத்தியோ திமுக காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பேசும்போது தனது தந்தையை அவமதித்தவர்கள் பற்றிப் பேசினார்.

உண்மையில் அவர்கள் ஸ்டாலினின் தந்தையை மட்டும் அவமதிக்கவில்லை. ஏனெனில் கருணாநிதி சாதாரண நபர் அல்ல. கருணாநிதியை அவமதித்தன் மூலம் தமிழர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஸ்டாலின் பேசியதை என்னால் உணர முடிகிறது.

நீட் தமிழகம் முடிவு செய்யட்டும்

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர் சொல்லப்பட்டது. அனிதா என்ற பெயர். அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை தமிழகத்தில் நடைபெறாது.  அதற்காகவே எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

மோடி கருத்துப் பரிமாற்றங்களில் நம்பிக்கையற்றவர்..

நாங்கள் கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தீர்வுகளை எட்டமுடியும் என நம்புகிறோம். ஆனால் மோடியும் பாஜகவும் இதில் நம்பிக்கையற்றவர்கள். அதனால்தான் ஒருநாள் இரவு 8 மணிக்கு இந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டார். ரூ.500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தார். அதனால்தான் திருப்பூர் என்ற ஆடை கேந்திரமும், பட்டுத் தொழிலின் தலைநகரான காஞ்சியும் வேதனைப்படுகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனை அழிக்க வேண்டும் என்று மோடி இதனைச் செய்தார்.

பணமதிப்பு நீக்கம் பற்றி மோடி யாரிடமாவது கேட்டாரா? எந்த சிறுதொழில் முதலாளியாவது அழைதுப் பேசினாரா? அவர் ஒருவேளை 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட பதில் சொல்லியிருக்கும்.

தமிழக விவசாயிகளை மோடி என்ன செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஆடையில்லாமல் போராடினார்கள். அவர்களை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் எனக் கேட்கும் நாகரிகம்கூட பிரதமருக்கு இல்லை. ஆனால், ஊழல்வாதிகளைக் கட்டித் தழுவுகிறார். நீரவ் மோடியுடன் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.

பின்னர், கப்பார் சிங் கொள்ளைக்கார வரியை விதித்தார். 5 விதமான வரி. 28% வரி. நெசவாளிகள் நூல் வாங்க வரி செலுத்த வேண்டியுள்ளது. நெசவுத் தொழிலுக்கான கருவிகளை வாங்க வரி விதிப்பு உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் உண்மையான ஜிஎஸ்டி வழங்குவோம். ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிமையான ஜிஎஸ்டி வரி என்ற சீர்திருத்தம் செய்வோம்.

ஏழை மக்களுக்கான ரூ.72,000

மோடி அம்பானிக்கும் அதானிக்கும் வங்கிக் கடன், சலுகைகள் எனப் பணம் கொடுத்தால், காங்கிரஸ் திமுக ஏழை மக்களுக்குக் கொடுக்கும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நியாய் யோஜனா. இது ஒரு புரட்சிகரமான திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பெண்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் செலுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.72,000 வீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பணம் செலுத்தப்படும்.

பெண்களே இந்தியாவின் பலம்

பெண்கள்தான் இந்தியாவின் பலம். ஆனால் அவர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதனை உறுதிப்படுத்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். அதேபோல், மத்திய அரசு அலுவலகப் பணிகளில் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மோடி என்ன செய்தார். உண்மையில் எதுவும் செய்யாமல் மோடி உங்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கிறார். வெற்று அறிவிப்பை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அறிவித்தார்.

மோடி பணக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு பணம் வழங்கினார். இளைஞர்களுக்கு என்ன செய்தார். மேக் இன் இந்தியா பேப்பரில் இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்கள் கையில் இருக்கும் செல்போன், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, நீங்கள் போட்டிருக்கும் காலணியைப் பாருங்கள். எல்லாம் மேட் இன் சைனா என்று சொல்லும். நாங்கள், இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பளிப்போம். புதிதாக தொழில் முனைவோர் 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அரசுத் துறையிடமும் அனுமதி பெறும் கெடுபிடி இருக்காது''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close