மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஏற்படுத்தப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு


மதுரை: சென்னையை தவிர்த்து தமிழகத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் எலும்பு மஞ்ஜை மாற்று அறுவை சிகிச்சை இல்லாததால், தென் மாவட்ட மக்கள் இந்த சிகிச்சை பெற முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்னர். அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சிகிச்சை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் எலும்பு மஜ்ஜை பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எலும்பு மஜ்ஜை செயலிழப்பு நோய் ஏற்பட்டால் எலும்பு மஜ்ஜை செயலிழந்து ரத்த அணுக்கள் குறைந்து கொண்டே இருக்கும். அதனால் அடிக்கடி ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அடிக்கடி நோய்தொற்று, ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். இந்த சூழலில் மீண்டும் எலும்பு மஜ்ஜை செயல்பட வேண்டுமென்றால் (Bone Marrow Transplant Surgery-BMT) எலும்பு மஜ்ஜை சிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சை வசதி உள்ளது. ஏழை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே கடைசி நம்பிக்கை. ஆனால் இந்த சிகிச்சை தமிழத்தில் சென்னை ராஜீவ் காந்தி நினைவு பொது மருத்துவமனையில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையானது தென்தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை. மாநிலத்திலேயே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்தது இரண்டாவது பெரிய மருத்துவமனையாக திழந்து வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த நோயாளிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான் கடைசி நம்பிக்கையாக இருந்து வரும் நிலையில் இன்னும் மதுரையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அமைக்காத நிலை உள்ளது.

அதனால், தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் இந்த மருத்துவ சேவையை வழங்க மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை கே.கே.நகரை சேர்ந்த சுகாதார செயற்பட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது: ''குழந்தைகள் சிலருக்கு மரபணு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக தலசீமியா, அரிவாள் செயல் அனீமியா, ஃபேன்கோனி அனீமியா, ஆஸ்டியோ பெட்ரோசிஸ், இம்யூனோ குறைபாடு போன்ற மரபணு சார்ந்த நோய்களுக்கும் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 15 லிருந்து 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

நோயின் தன்மைகேற்ப ரூ.40 லட்சம் வரை கட்டணம் பெறப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் தனியார் மருத்துவமனைகளுக்கு அத்தொகை போதுமானதாக இல்லை. இதனால் ஏழை நோயாளிகளுக்கு தனியாரில் இச்சிகிச்சை மேற்கொள்வது எட்டாக்கனியாக உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி நினைவு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார திட்டம் மூலம் ரூ.7.5 கோடி செலவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இச்சிகிச்சை தொடங்கப்பட்டது. மொத்தம் 101 பேர் இதுவரை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. அங்கு இந்த சிகிச்சை வசதி, ஒரு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை நிபுணர் (Bone marrow transplant surgery), 2 துணை பேராசிரியர்கள், 6 பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 7 உதவி மருத்துவர்கள் உள்பட 31 மருத்துவக்குழுவின் செயல்படுகிறது.

இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் 30 முதல் 50 நாள் வரை தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். சென்னையை தவிர, சென்னையில் இருந்து தொலை தூர மாவட்டங்களான கன்னியகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ள தங்கள் நோய் பாதிப்புடன் நூற்றுக்கணக்கான கி.மீ. பயணம் செய்து செல்ல வேண்டும். அதனால், அலைக்கழிப்பு, செலவினங்கள், பொருளாதார இழப்பு என்று பல்வேறு வகையில் நோயாளிகளுடன், அவர்கள் உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.

மதுரை அரசு மருத்துவமனை டீன் (பொ) தர்மராஜ் கூறுகையில், ''எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அமைத்திட குறைந்தப்பட்சம் ரூ.20 தேவைப்படும். நிதி ஒதுக்கீட்டை தாண்டி, நிறைய நுட்பமான மருத்துவப்பணிகள் தேவைப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது'' என்றார்.