[X] Close

பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ.62 கோடி திரும்ப ஒப்படைப்பு; நடத்தை விதிகளை மீறியதாக 4,185 வழக்குகள் பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


62-4-185

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 07:08 am
  • அ+ அ-

தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.177 கோடியே 69 லட்சத்தில், உரிய ஆவணங்கள் அடிப்படையில் ரூ.62 கோடியே 24 லட்சம் ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். நடத்தை விதிகளை மீறியதாக 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு படையினர் சோதனையில் இதுவரை ரூ.127 கோடியே 66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமானவரித் துறையினர் சார்பில்ரொக்கம் ரூ.50 கோடியே3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரித் துறை மட்டும் தனியாக ரூ.37 கோடியே 78 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது. மீதமுள்ள தொகை, நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படையினருடன் இணைந்து நடத்திய சோதனைகளில் பிடிபட்டதாகும்.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில், சரியான ஆவணங்களை அளித்ததால் ரூ.62 கோடியே 24 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 989 கிலோ தங்கம், 594 கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.284 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4,185 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் 93 வழக்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவிஜில் செயலி

சிவிஜில் கைபேசி செயலி மூலம் 2,085 புகார்கள் வந்துள்ளன. அதில், 899 சரியான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 புகார்கள் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. மற்றவைகைவிடப்பட்டன. ‘1950’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. தற்போது வரை ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 788 அழைப்புகள் வந்துள்ளன. இதில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 1 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2,787 அழைப்புகள் கைவிடப்பட்டுள்ளன.

விளம்பரம் வெளியிடுதல்

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அச்சு ஊடகங்களில் வாக்குப்பதிவு நாள் அல்லது அதற்கு முந்தைய நாளில் விளம்பரம் வெளியிட விரும்பினால், மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் உள்ள குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதர காட்சி ஊடகங்களில் ‘சைலன்ட் பீரியட்’ நேரத்தில் எந்த விளம்பரமும் வெளியிடக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செல்போனுக்கு தடை

தமிழகத்தில் 67,720 வாக்குச்சாவடிகளில் வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில் சில பகுதிகளில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்து செல்ஃபி எடுத்து புகைப்படத்தை வெளியிட்ட தகவல்கள் வந்தன. இதுபோன்ற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுமா? வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லலாமா என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் இதுபோன்ற செயல்கள் நடந்ததா என்பது தெரியவில்லை. ஆணையம்தான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும். அதே நேரத்தில், வாக்குச்சாவடிக்குள் யாரும் செல்போனை கொண்டு செல்லக்கூடாது’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close