சட்டம் - ஒழுங்கை காப்பதில் தமிழகம் வெற்றிகரமாக செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழகம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, எதிரிகள் சிலருக்கு வெளி நாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளன. எனவே, அதனை இண்டர் போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் தமிழக அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம், 40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 லட்சம்பேர் பங்கேற்ற மதுரை சித்திரைத் திருவிழா, 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம், 5லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசம், 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்றம், 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியுள்ளோம்.

கடந்தாண்டு மட்டும், காவல்துறையில் மாணவர்களை பண்படுத்தும் சிற்பி திட்டம், குற்றவாளிகளை திருத்தும் பறவை திட்டம், பதிவேடு குறறவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க பருந்து திட்டம் உள்ளிட்ட சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது. விவாதத்தில், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சென்னை மாநகரில் காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார்.

எம்எல்ஏக்கள் ஜவாஹிருல்லா, சின்னதுரை ஆகியோர் கடந்த காலங்களில் போராட்டங்களில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மீது வழக்கு பதியப்பட்டதால், பாஸ்போர்ட், தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர். கடந்த3 ஆண்டுகளில் இதுபோன்ற பலஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. மீதமுள்ள வழக்குகள் பற்றி உரிய தரவுகள் பெற்று திரும்ப பெற சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

சிந்தனைச் செல்வன் கோரியபடி, செங்கல்பட்டு மாவட்டம்- திருப்போரூரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். இதன் மூலம் திருப்போரூர், கோவளம் பயன்பெறும். பாமகவின் ஜி.கே.மணி கோரியபடி, மக்களவைத் தேர்தல் பணியாற்றிய காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்கப்படும். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இக்கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தமளிக்கிறது. ஒருபுறம் தேர்தல் தோல்வி; மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடிஎன சிக்கி, அதில் இருந்து தப்பிக்கவே அவை நடவடிக்கைகளுக்கு அதிமுக குந்தகம் ஏற்படுத்தியது. இ்வ்வாறு அவர் பேசினார்.