[X] Close

பலிகடா ஆக்கப்படுகிறார் ரஜினி; பாஜகவைச் சார்ந்து இருக்கிறார்: கே.எஸ்.அழகிரி சந்தேகம்


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 19:59 pm
  • அ+ அ-

ராகுல் காந்தி வரும் 12-ம் தேதி தமிழகத்தில் 4 இடங்களில் பேசுகிறார். அவருடன் ஒரு இடத்தில் ஸ்டாலின் பேசுகிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் வாய்திறந்த நடிகர் ரஜினி மறைமுகமாக பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயத்தைக் குறிப்பிட்டு நதி நீர் இணைப்பை வரவேற்று ஆண்டவன் புண்ணியத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் நதி நீர் இணைப்புக்கான தனி அமைச்சகத்தை உடனே அமைக்கவேண்டும் என பேட்டி அளித்திருந்தார். இது புது சர்ச்சையைக் கிளப்பியது.

பாஜக ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாக ரஜினி தெரிவிப்பதாக விமர்சனம் எழுந்தது. அமைச்சர் ஜெயக்குமார் அதை வரவேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் ரஜினி நிலைப்பாடு குறித்து விமர்சித்துள்ளது. சத்திய மூர்த்தி பவனில் தேசம் காக்கும் கை என்ற பெயரில் பிரச்சார குறுந்தகடு வெளியீடு இன்று நடைபெற்றது.

குறுந்தகட்டை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:

''அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 12-ம் தேதி தமிழகம் வருகிறார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் என மொத்தம் 4 இடங்களில் ராகுல் பேசுகிறார். இதில் சேலத்தில் ராகுலுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ரஃபேல் விவகாரத்தை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது மிகப்பெரிய வெற்றி. மேலும், சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவுக்கே மோடி அரசு காண்பிக்கவில்லை. சட்டப்படி சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு முன் விவாதிக்கப்பட வேண்டும்.

அதற்கு முன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ரஃபேல் விவகாரத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்ஸின் தலையீடு ரிசர்வ் வங்கி வரை தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கிறார். நாடு பாதுகாப்பாக இல்லை.  

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தால் ஏற்கிறோம். மற்றபடி குற்றவாளிகள் தமிழர்கள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.

வயநாட்டில் ராகுல் நிற்பதால் எங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் எந்த சங்கடமும் ஏற்படாது. எங்களுக்கு ஏற்கெனவே கூட்டாட்சி நடத்திய அனுபவம் இருக்கிறது .

ரஜினிகாந்த் ஒரு சார்பாகப் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. நான் அவரது ரசிகன். ரஜினி கருத்து கூறும்போது துறை சார்ந்தவர்களிடம் கலந்தாலோசித்து கருத்து கூற வேண்டும்.  நதிநீர் இணைப்பு சாதாரண விஷயமல்ல.

பல மாநில விவசாயிகளின் ஒத்துழைப்பு அதற்குத் தேவை. இது குறித்து ரஜினி அவசரப்பட்டுப் பேசியிருக்க வேண்டாம். இதில் ரஜினி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. நதிநீர் இணைப்பு என்பது சாத்தியமில்லை. இது காங்கிரஸின் நிலைப்பாடு மட்டுமல்ல. அறிவியல் பூர்வமானது''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close