வருவாய்த் துறையினரை தரக்குறைவாக பேசிய செய்யூர் எம்எல்ஏவை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வருவாய்த் துறையினரை தரக்குறைவாக பேசியதாக செய்யூர் எம்எல்ஏ பாபுவை கண்டித்து, செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 16-ம் தேதி வருவாய்த் துறை தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜமாபந்தியின் நிறைவு நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ பாபு பங்கேற்றார்.

அப்போது, பெண்மணி ஒருவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என எம்எல்ஏ கேட்டதாகவும், ஆனால், வருவாய்த் துறை ஆய்வாளர் முழு விசாரணை செய்ததில் சட்டப்படி வாரிசு சான்றிதழ் தர முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால், வருவாய் துறையினருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாரிசு சான்றிதழ் தர வருவாய் துறையினர் லஞ்சம் கேட்டதாகவும், அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்எல்ஏ பாபு பேசியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினரை தரக்குறைவாக எம்எல்ஏ பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.