[X] Close

ம.நீ.ம. வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் ஜிஎஸ்டியை வாபஸ் பெற வைப்பேன்: உடுமலையில் கமல்ஹாசன் உறுதி


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 10:36 am
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் ஜிஎஸ்டியை வாபஸ் பெற வைப்பேன் என கமல்ஹாசன் பேசினார்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகையை ஆதரித்து உடுமலையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்தை செயலாக்க வேண்டியது உங்கள் கடமை. பெண்கள் எப்படி இருக்கணும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் மூகாம்பிகை. இவர் தனியாக உலகம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். உங்களுக்காக டெல்லியில் குரல் எழுப்புவார். இவரை ஆதரிக்க வேண்டியது நம் கடமை. மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது தமிழகம். அந்த தேரை செல்ல வேண்டிய பாதையில் இழுத்து தள்ள வேண்டியது உங்கள் கடமை. உங்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல எங்களின் கள வீரர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசு எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் அழிக்க நினைத்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு அவர்களின் அரசாணையை அழித்து விட்டது. மநீம வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் ஒரு லட்சம் மக்களின் கையெழுத்தை பெற்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வைப்பேன். ஜி.எஸ்.டி –யை திரும்ப பெற வைப்பேன். யார் பிரதமராக இருந்தாலும் தயங்க மாட்டோம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் கொண்டுவரவில்லை. நாங்கள் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவோம்’ என்றார்.

திடீரென தனது பேச்சை நிறுத்தி விட்டு வேட்பாளர் பேசுவார் என அவரிடம் மைக்கை கொடுத்தார் கமல். வேட்பாளர் மூகாம்பிகை பேசி முடிக்கும் வரை அவரது பேச்சை கமல் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார். பிற கட்சிகளில் தலைவர்கள் பரப்புரை செய்யும் போது வேட்பாளர் பேசுவதற்கு வாய்ப்பளிப்பதில்லை. ஆனால் கமல் தனது வேட்பாளரை மக்களிடம் பேச வைத்து கவனித்தது மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close