18 ஆண்டுகளாக நிலுவையில் ரயில்வே மேம்பாலப் பணி: திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருப்பூர்: 18 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டிய பால பணிகளை, 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, திருப்பூரில் இன்று (ஜூன் 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 18 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வரும், அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியிலுள்ள பாலத்தின் கீழே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைப்பாளையம் மாதர் கிளைச் செயலாளர் ப. செல்வி தலைமை வகித்தார்.

நகர செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர் த.நாகராஜன், ரங்கநாதபுரம் கிளைச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கூறியதாவது: "18 மாதங்களாக கட்டி முடிக்க வேண்டிய பாலத்தை 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் நெடுஞ்சாலைத் துறையை கண்டிக்கிறோம். பலமுறை கடிதம் வாயிலாகவும், நேரிலும், அலைபேசியிலும் தகவல் சொல்லியும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் தூங்கிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத் துறையை கண்டிக்கிறோம். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகரம் முழுவதும் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மக்களைக் கடும் சிரமத்துக்கு ஆளாக்கி வரும் நிலையில், அவற்றையும் சீரமைக்க வேண்டும், தெரு நாய்கள் தொந்தரவு பிரச்சினைக்கும் தீர்வு காணவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அணைப்பாளையம் கிளைச் செயலாளர் ரவி நன்றி தெரிவித்தார்.