“அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” - கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு


சென்னை: “தமிழகத்தில் அரசியல் மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று தவெக தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ளது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் காலை 10 மணி அளவில் திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கண்வென்ஷன் சென்டருக்கு வருகை தந்தார். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் ஆளாக நாங்குநேரியில் சாதிய ஆதிக்க தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை உடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், "நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும் பணிவான வணக்கங்கள். மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ, மாணவிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை பார்க்கும்போது ஒரு பாசிட்டிவ் பவர் கிடைக்கிறது.

இந்த மாதிரி விழாவில் ஒரு சில நல்ல விஷயங்களை தாண்டி வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, 100 சதவிகித உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்தத் துறையை தேர்ந்தெடுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.

உங்களுக்கு எனது அறிவுரை, பொதுவாக ஒரு துறையை நாம் தேர்தெடுக்கும் போது அதில் தேவைகள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்போம். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை.

ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது.

உங்களுக்கு இன்னுமொரு சின்ன அறிவுரை. அது நண்பர்கள் மற்றும் நட்பு தொடர்பானது. ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்களுடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான்.

எனினும், உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.

இதனை நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு தகப்பன் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. 'போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதலெல்லாம் தவறவிட்டு விட்டார்கள்' என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.

அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்." இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தவெக கட்சியை தொடங்கினார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து, பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கினார்.

அதைப்போலவே நடப்பாண்டும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டி சான்றிதழ்களை வழங்கும் வகையில் தவெக சார்பில் 'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' சென்னை திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுவருகிறது. இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை பெற உள்ளனர். பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வரும் ஜூலை 3-ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.