[X] Close

எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்பதா?- மோடிக்கும், அமித் ஷாவுக்கும் அத்வானியே புத்தி சொல்லி இருக்கிறார்: ஸ்டாலின்  


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 10:38 am
  • அ+ அ-

நாடு என்பது மோடிக்கும், அமித் ஷாவுக்கும் மட்டும் சொந்தம் என நினைத்து சர்வாதிகாரம் செய்து வருகின்றனர். விரைவில் அதற்கான தண்டனை கிடைக்கும் என ஸ்டாலின் பேசினார்.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்களுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்தத் தேர்தல் அறிக்கை இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களைப் பொறுத்தவரையில் ஹீரோவாக இருக்கின்றது. இந்த ஹீரோவாக இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையைப் பார்த்து மோடி ஜீரோவாக மாறி இருக்கின்றார்.

ராகுல் வெளியிட்டது ஹீரோ, மோடி ஆகியிருப்பது ஜீரோ. அருணாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மோடி ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்துவிட்டு அவருக்கு காய்ச்சலே வந்து விட்டதாக நமக்கு செய்தி கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையைப் பார்த்து, சில கருத்துகளை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கின்ற பொழுது பொய்களால் நிரம்பியிருக்கின்றது என்று சொல்கின்றார். இதை மோடி சொல்வது தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஏனென்றால் பொய் சொல்வது தான் மோடியின் வழக்கம். தவறான வாக்குறுதிகளை வழங்குவது அவருக்கு இருக்கக்கூடிய வழக்கம், பழக்கம்.

ஆனால், மோடி சொல்கின்றார் பாஜக தவறான வாக்குறுதிகளைத் தராது என்று. நான் கேட்கின்றேன், மோடி, கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இதே தமிழகத்திற்கு வந்தபோது பல வாக்குறுதிகளைத் தந்து அதனை இன்றளவும் நிறைவேற்றவில்லை.

இந்த லட்சணத்தில் தேசம் - தேசபக்தி என்று, இப்பொழுது திடீரென்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார். மோடி அவர்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தேசவிரோதிகள் என்று சித்தரிக்கப்படுகின்றார்கள். இந்தியாவின் மத்திய அரசை பாஜக இன்றைக்கு ஆளுகின்றது.

அப்படி இந்தியாவை பாஜக ஆளுகின்ற காரணத்தினால் பாஜகவும் இந்தியாவும் ஒன்றாகி விடாது. நாளைக்கே அவர்கள் அதிலிருந்து இறங்கப் போகின்றார்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, பாஜகவை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று மோடியும் அமித் ஷாவும் சொல்வதை, நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை விட அத்வானி அதை தாங்கிக்கொள்ள முடியாமல், அவரே இன்றைக்கு அதற்கு ஒரு விளக்கம் தந்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் எதைச்சொன்னாலும் அவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று ரப்பர் ஸ்டாம்ப் போன்று முத்திரை குத்துகின்ற நிலையை மோடியும் அமித் ஷாவும் உருவாக்குகின்றார்கள். இதற்கு அத்வானி அவர்கள், ஒரு நல்ல தெளிவான விளக்கத்தை நேற்றைய முன்தினம் அவர் வெளிப்படையாகச் சொல்லி இருக்கின்றார்.

அதாவது அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு உடையவர்களை தனது எதிரியாக தேச விரோதி என்று நாங்கள் முத்திரை குத்தியது இல்லை என்று சொல்லி இருக்கின்றார். இதைவிட மோடிக்கு யாரும் பதில் சொல்ல வேண்டிய, விளக்கம் சொல்ல வேண்டிய தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close