[X] Close

ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு: திருவாரூர் அருகே பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல் சேதம்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 07:36 am
  • அ+ அ-

திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பருத்தி சாகுபடி வயலில்கச்சா எண்ணெய் பரவியதால் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் சேதமடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளை அமைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்துவருகிறது. இதை விவசாய நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் வெள்ளக்குடி என்ற இடத்தில் சேகரித்துவைத்து, சுத்திகரிப்பு செய்வதற்காக அங்கிருந்து நரிமணத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் அருகே உள்ள எருக்காட்டூர் என்றஇடத்தில் செல்வராஜ் என்ற விவசாயியின் 11 ஏக்கர் பரப்பளவிலான வயல் வழியாக எண்ணெய்க் குழாய் செல்கிறது. தற்போது செல்வராஜ் பருத்தி சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று காலை எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இவரது வயலில் கச்சா எண்ணெய் பரவியது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கச்சா எண்ணெய் பரவியதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு செல்வராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் கூறியபோது, “கடந்த 6 மாதங்களில் இப்பகுதியில் 3-வது முறையாககுழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் பதித்துள்ளதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் ஆண்டுதோறும் எங்களுக்கு வாடகை கொடுத்தாலும் இதுபோன்று கச்சா எண்ணெய் வெளியேறுவதால் சாகுபடி பாதிக்கப்படுவது தொடர்கிறது. எனவே, சாகுபடி பாதிக்கப்படுவதையும் கருத்தில்கொண்டு, சேதத்தைக் கணக்கிட்டு தனியாக இழப்பீடு வழங்க வேண்டும். கச்சா எண்ணெய் பரவிய நிலத்தை மீண்டும் சாகுபடி செய்வதற்கு ஏற்பமாற்றித் தரவேண்டும்” என்றார்.

“5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எண்ணெய்க் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி, ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய்களைப் புதுப்பிப்பது இல்லை. இதனால்தான் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது” என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close