[X] Close

குடிநீர் வழங்காததை கண்டித்து வாக்கு சேகரிக்க யாரும் வரக்கூடாது என கிராம மக்கள் அறிவிப்பு: மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாகவும் எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:45 am
  • அ+ அ-

சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கருப்புக் கொடி ஏற்றி கண்ணனூர் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கண்ணனூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சுகாதாரமான குடிநீர் கிடையாது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனுக் கொடுத்தும் பலனில்லை. இதனை கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் நேற்று அறிவித்துள்ளனர். மேலும், அவர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லை

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்டது கண்ணனூர் பகுதி. 18-வது வார்டில் உள்ளது. சுமார் 2,500 மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சி மூலம் பிற பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்கினாலும், கண்ணனூர் பகுதியை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும், தெருவிளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. கண்ணனூர் பெரிய ஏரியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. மாடு மற்றும் கோழி இறைச்சிக் கழிவு, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், ஏரியில் துர்நாற்றம் வீசுகிறது. விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரி ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. ஏரியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பலனில்லை.

விண்ணமங்கலம் ஆற்றில் இருந்து சேத்துப்பட்டுக்கு கொண்டு வரப்படும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கண்ணனூர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. எங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்காததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கிறோம். வாக்கு கேட்டு அரசியல் கட்சிகள் வருவதற்கும் அனுமதி இல்லை. எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ளோம்” என்றனர்.

கிராம மக்கள் திட்டவட்டம்

இதுபற்றி தகவலறிந்த வட்டாட் சியர் சுதாகர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட் டுள்ள கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கண்ணனூர் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இருப்பினும், தேர்தல் புறக்கணிப்பு முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close