[X] Close

தேர்தல் பிரச்சாரத்தில் நூறு நாள் திட்ட பணியாளர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 11:32 am
  • அ+ அ-

நூறு நாள் வேலைக்கு வரும் பணியாளர்கள் வேலையைப் பாதியில் விட்டுவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

நாடு முழுவதும் 100 நாள் வேலைத் திட்டம் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பண்ணைக் குட்டை, வரத்துக் கால்வாய் அமைத்தல், நீர்நிலை சீரமைப்பு, கழிவறை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் ஊர், ஊராகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தலைவர்களின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க 100 நாள் திட்டப் பணியாளர்களை அரசியல் கட்சியினர் அழைத்துச் செல்கின்றனர். அதேபோல் கிராமங்களில் வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு வரும் போது கூட்டத்தைக் கூட்டுவதற்காக 100 நாள் திட்டப் பணியாளர்களையே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 கிடைப்பதால் 100 நாள் திட்டப் பணியை பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.

பணியாளர்கள் பட்டியலில் பெயர் இருந்தும் சிலர் பணிக்குச் செல்லாமல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். சில தினங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே இளங்குடி ஊராட்சி கருக்குடியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 53 பேர் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் 24 பெண்கள் உட்பட 27 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். எஞ்சிய 26 பேர் அங்கு இல்லை. மேலும் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கான ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆட்சியர் ஜெயகாந்தன் கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சிச் செயலாளர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் பணி நடக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும். மேலும் கையெழுத்திட்டு விட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட ஊழியர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம், என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close