பல்லாவரம் - பரனூர் ஜி.எஸ்.டி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு பரிந்துரை


ஜி.எஸ்.டி சாலையில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட குழுவினர்

செங்கல்பட்டு: ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் முதல் செங்கல்பட்டு - பரனூர் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆய்வு குழுவினர் தங்கள் அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில் சாலை ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ.ச.நாராயண சர்மா தலைமையில் காவல் துறை, உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலைதுறை, அரசு போக்குவரத்து கழகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது. அதன்படி இந்த குழு ஆய்வு மேற்கொண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் விவரம் வருமாறு: 'பரனூர் சுங்கச் சாவடி சர்வர் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மகேந்திரா சிட்டிகள் நேரத்திற்கு தகுந்த போல் சிக்னல் நேரம் மாற்றி அமைக்க வேண்டும். சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் சாலையோரம் உள்ள கடைகளை அகற்றி, சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மாவட்ட முழுவதும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அகற்ற வேண்டும்.

மேலும், சர்வீஸ் நிறுத்தப்படும் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க கட்டுப்படுத்த வேண்டும். பொத்தேரியில் சிக்னல் அருகே வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் வேண்டும். மாணவர்கள், சாலையைக் கடப்பதை தவிர்க்க தகுந்த வழிவகை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையை முழுமையாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வண்டலூர் - கூடுவாஞ்சேரி வரை சர்வீஸ் சாலை இல்லை. சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.

தாம்பரத்தில் எம்டிசி பேருந்துகள் சாலையிலேயே நிற்பதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்திற்கு வரும் கனரக வாகனங்களை போக்குவரத்து நேரத்தில் நிறுத்த வேண்டும். நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பரனூர், புலிப்பாக்கம் பட்டாளம், புக்கத்துறை, கற்பக விநாயகா பச்சையம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் சாலையில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால் அதை ஏற்படுத்த வேண்டும்.

பல்லாவரம் பகுதியில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது அவற்றை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்தினால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.