[X] Close

கோடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் சதி: கோவில்பட்டியில் பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி ஆவேசம்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 08:12 am
  • அ+ அ-

கோடநாடு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சதி செய்வதாக கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக விளாத்திகுளம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: அந்நிய நாட்டு சக்திகள் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு, நமக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய நிலையில் தேர்தலை சந்திக்கிறோம். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் உறுதியான, திறமைவாய்ந்த பிரதமர் தேவை. அவர் நரேந்திர மோடி மட்டுமே.

`தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என, ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. இதற்காக விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு, திமுக செயற்குழு உறுப்பினர் ஒருவர், ரயிலில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று கர்ப்பிணி ஒருவர் புகார் அளித்தார். குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைகப்பட்டுள்ளார். இவர்கள் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசலாமா?கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் ஒரு ஹோட்டலில் தங்கி திட்டம் தீட்டியது குறித்த செய்தி வெளியானது. இவ்விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம் சுமத்துவது எப்படி என்று இருவர் பேசிக்கொண்டிருக்கிற காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வந்துவிட்டன.

இதற்கான திரைக்கதை, வசனம், தயாரிப்பு என அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின்தான். கூலிப்படைக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் கொடுத்தது திமுக வார்டு செயலாளர்கள். ஸ்டாலின் கூலிப்படை தலைவர். இப்படிப்பட்டவர் ஆட்சிக்கு வந்தால் நாடு என்னவாகும்?2ஜி வழக்கில் சிபிஐ வழக்குபோட்டு விசாரணை நடந்தபோது, மர்மமான முறையில் சாதிக் பாட்ஷா இறந்துவிட்டார். அவரது மனைவி ரேணுகா பானு, `கூடா நட்பு கேடாய் முடியும்’ என அஞ்சலி விளம்பரம் கொடுத்திருந்தார். அதற்கு அடுத்த நாளே ரேணுகா பானு சென்ற கார் தாக்கப்பட்டது. எனது கணவர் கொலை செய்யப்பட்டார் என்று அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை சிபிஐ மூலம் அதிமுக அரசு விசாரிக்கும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

பிரச்சாரத்தின்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி மகன் கார்த்திக், முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை, அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தனர்.

இதேபோன்று, சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜனை ஆதரித்து சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ப.சிதம்பரம் பல முறை சிவகங்கை எம்பியாகவும், நாட்டின் நிதி அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரே செய்யாதபோது அவரது மகன் எப்படி இந்தத் தொகுதிக்கு நல்ல திட்டங்களைச் செய்வார். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாறியது.

மத்திய அரசு உதவியுடன் கோதாவரி-காவிரி இணைக்கப்படும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு, சாலை வசதி நன்றாக இருப்பதால் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3.431 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். பிரச்சாரத்தின்போது அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்பி ஆகியோர் உடன் சென்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close