கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு


சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அவையை ஒத்திவைக்க கோரி அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நேற்றும் கேள்வி நேரம் தொடங்கியதும் அதிமுகவினர் பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை. இதைதொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர்உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து பேரவைத் தலைவர்பேசியதாவது: முதல் நாள்தொடங்கி இன்று வரை அவைக்குவந்து கலகம் ஏற்படுத்தி வெளியேறும் நோக்கில்தான் நடந்து கொள்கின்றனர். நேற்றும் (ஜூன்25) வெளியேற்றினேன். அப்போது, முதல்வர் கேட்டுக்கொண்டதால் ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்தேன். ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக இன்று (ஜூன் 26) காலை கடிதம் அளித்தனர். ஆய்வு செய்து பதில் அளிப்பதற்குள் அவர்கள் பேச முற்பட்டனர். இதன்மூலம் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அவர்கள் வந்துள்ளனர்.

மேலும், பேரவை விதிப்படி ஒரு பொருள் குறித்து, விவாதித்து பதிலளித்த பின் மீண்டும் விவாதிக்க விதியில் இடமில்லை. ஆனால் அவர்கள் சபையின் மாண்பை குலைக்கும் நோக்கில், பேச அனுமதிக்கவில்லை என்றுஒரே காரணத்தை கூறி வருகின்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. வேண்டுமென்றே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘‘தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகள் நாட்டில் நடப்பதுண்டு. இந்தியாவில் கள்ளச்சாராயம் இல்லாத மாநிலம்எது உள்ளது. நடக்கக் கூடாதது நடைபெற்றுவிட்டது. அதற்கான பரிகாரத்தை முதல்வர் செய்துள்ளார். இதைவிட ஒரு அரசு என்ன செய்ய முடியும். இந்த விஷயத்தில் முதல்வர் பதில் சொல்வார் என்பதால் தான் மலிவான விளம்பரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை நீடிக்கக் கூடாது. எனவே, பேரவை அலுவல்களை நடைபெற விடாததாலும், பேரவைக்கு குந்தகம் விளைவிப்பதாலும் அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து, பேரவை முன்னவர் கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,‘‘ இந்த கூட்டத்தொடர் முடிகின்ற வரையுள்ள நாட்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி தலைமையிலான அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கூட்டத்தொடர் முழுமைக்கும் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது’’ என்றார்.

அதிமுக வீண் விளம்பரம் தேடுவதாக முதல்வர் விமர்சனம்: பேரவைத் தலைவர் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அதிமுக எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என தெரிவித்து வருகிறேன். ஆனாலும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்த பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.