செயலரால் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு: பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் புகார்


திருப்பூர்: பெருமாநல்லூர் ஊராட்சி செயலரால் வளர்ச்சி பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், புதிய செயலரால் நியமிக்கக் கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் அளித்தனர்.

பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி தலைமையில் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: "பெருமாநல்லூர் ஊராட்சியின் வளர்ச்சிக்காக மரக்கன்றுகள் நடுதல், நால்ரோட்டில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிடம், பயணிகளுக்கான நிழற்குடை அமைத்தல் என பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஊராட்சியின் செயலராக நியமிக்கப்பட்ட பொன்னுசாமி, ஊராட்சி தலைவர் போட்டியிட்டு தோற்ற அதிமுக வேட்பாளரின் சொந்த மைத்துனர் ஆவார். ஊராட்சி மன்றத்துக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித பணிகளையும் விரைவாக செய்து கொடுப்பதில்ல.

தொடர்ந்து பொதுமக்களை அலைக்கழிக்கிறார். முதல்வர் ஸ்டாலினின், நல்வழிபாதையில் நடந்து கொண்டிருக்கும் ஊராட்சிக்கு நாள்தோறும் அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களே ஊராட்சி அமைப்புக்கு பதவி இருப்பதால், மேற்கொண்டு பணிகளை செய்ய, இவரை பெருமாநல்லூர் ஊராட்சியில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும்." என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பெருமாநல்லூர் ஊராட்சி செயலர் பொன்னுசாமி கூறும்போது, “கடந்த 4 நாட்களுக்கு முன்பு, என்னை தேவையின்றி பேசியது தொடர்பாக எங்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆகவே இது போன்ற புகார்களை அளிக்கின்றனர்.” என பொன்னுசாமி கூறினார்.