[X] Close

நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் 2 பேராசிரியர்கள் சிக்க வாய்ப்பு: சிபிசிஐடி தீவிர விசாரணை


nirmaladevi-controversy

நிர்மலா தேவி | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 03 May, 2018 13:15 pm
  • அ+ அ-

அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் 3 பேர் தொடர்பான ஆடியோ, வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதில் மேலும் 2 பேராசிரியர்கள் சிக்க வாய்ப்பு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, தனது கல்லூரி மாணவிகளை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டியதாக கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி நடத்திய விசாரணையின் அடிப்படையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்பிஏ துறை உதவிப் பேராசிரியர் முருகன், கலைப்பிரிவு ஆராய்ச்சி மாணவர் திருச்சுழியை சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பென்-டிரைவ், லேப்-டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. 

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறியதாவது: நிர்மலாதேவியிடம் இருந்து 2 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அவரது தகவல் அடிப்படையில் கைதான முருகன், சரண் அடைந்த கருப்பசாமியின் வீடுகளில் நடத்திய சோதனையில் பென் டிரைவ், உள்ளிட்டவையும் சிக்கி உள்ளன. போன்களில் உள்ள ஆடியோ, வீடியோ தகவல்களை சென்னை சில ஆவணங்களும் சிக்கின. செல்போன்களில் கண்டறிந்த ஆடியோ, வீடியோ பதிவுகளை சென்னையிலுள்ள சைபர் கிரைம் ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்பட உள்ளது.

அழிக்கப்பட்ட புகைப்படங்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் எடுக்க வேண்டும். பென்-டிரைவ், லேப்-டாப்களில் உள்ள பதிவுகளையும் சேகரிக்கிறோம். தற்போது கைதான மூவர் பற்றிய ஆதாரங்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இதற்காக மூவர் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 3 பேர் அளித்த வாக்குமூலம், மொபைல்போன் உரையாடல்கள் மூலம் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வேறு நபர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களிடமும் விசாரிக்கப்படும். சில ஆவணங்களில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் மேலும் இரு பேராசிரியர்கள் சிக்க வாய்ப்புள்ளது. அவர்களை நெருங்கி விட்டோம். ஒரு சில தகவலுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-என். சன்னாசி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close