தஞ்சாவூர்: மாட்டுவண்டிக்கான மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மூடப்பட்டுள்ள மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ’திருவிடைமருதூர் வட்டம், முள்ளங்குடியில் கடந்த ஒராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக திறக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் நடுப்படுவை, மருவூர், திகுச்சென்னம்பூண்டி ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறக்க வேண்டும், பாபநாசம் வட்டம், புத்தூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ள மணலை, மாட்டு வண்டியில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும், மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ. 700-லிருந்து ரூ. 250-ஆக குறைக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டுவண்டித் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.