விழுப்புரம் மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளருக்கு ஆட்சியர் பழனி நோட்டீஸ்


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் லட்சுமிக்கு மாவட்ட ஆட்சியர் பழனி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது: "விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு குறைதீர் கூட்டங்களில் மின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் இழப்பீடு கிடைக்கப்பெறுவதில்லை என ஏராளமான புகார்கள் மனுக்களாக பெறப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் மகன் பூபாலன் உயர் மின்னழுத்த கம்பிகளால் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 12.02.2024 தேதி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்தி வந்தது. இதனால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் மூலம் பிரச்சனை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. ஆனால் இம்மனுவின் மீது இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி கலைவாணி என்பவர் 23.02.2024 ம் தேதி எருமனந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் உளுந்து, காராமணி அறுவடை செய்த போது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதால் அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளனர். இக்கோரிக்கையையே 24.02.2024 ம் தேதி விழுப்புரம் எம்பி துரை ரவிக்குமார் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

இவருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தோ அல்லது இழப்பீடு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரம் குறித்தோ அறிக்கை எதுவும் இதுநாள் வரை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படவில்லை. மேலும். விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள ரஹீம் லே - அவுட் தெருவைச் சேர்ந்த தினேஷ் குமார் 20.08.2021 ம் தேதி மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கப்பட்டு இறந்தது தொடர்பாக மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு தாங்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.மேலும் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக திங்கள் கிழமை தோறும் வாராந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியரின் தலைமையில் கடந்த 3 வாரங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தொடர்புடைய துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். ஆனால் இக்கூட்டங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்காணிப்புப் பொறியாளரான தாங்கள் கலந்துகொள்ளவில்லை.

மேலும் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா தலைமையில் 09.05.2024ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது. பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதால் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால், இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்ப நேரிடும். என ஆட்சியர் பழனி எச்சரித்துள்ளார்.