தென்காசியில் தொடர் மழை: குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இன்று காலை வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 24 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 21 மி.மீ., தென்காசியில் 18 மி.மீ., ஆய்க்குடியில் 16 மி.மீ., கடனாநதி அணையில் 11 மி.மீ., ராமநதி அணையில் 10 மி.மீ., குண்டாறு அணையில் 8.80 மி.மீ., செங்கோட்டையில் 4.80 மி.மீ., சங்கரன்கோவில், சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. இன்றும் காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரல் மழை பெய்தது.

குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்தது. தொடர் மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, வெள்ளம் குறைந்த பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடனா நதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 52 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 69 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30.8 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 32.75 அடியாகவும், அடவிநயினா அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும் இருந்தது.