[X] Close

தேமுதிக பிரமுகர் கொலை வழக்கு; நீதிமன்றத்தில் உறவினர் சரணடைந்தார்: சொத்து தகராறில் கொல்லப்பட்டது அம்பலம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 07:11 am
  • அ+ அ-

தேமுதிக பிரமுகர் கொலை வழக்கில் அவரது உறவினர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சொத்து தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (43). தேமுதிக பிரமுகரான இவர், நேற்று முன்தினம் காலை தனது மகன் ரோஹித்தை திருமங்கலத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாடி சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கும்பல் பாண்டியனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது.

இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில், போலீஸார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். பாண்டியனை கொலை செய்தது அவரது உறவினர் வினோத்குமார் (30) என்பது தெரியவந்தது. அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் வினோத்குமார் நேற்று காலை சரணடைந்தார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வினோத்குமாரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க கொரட்டூர் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘உறவினர்களான பாண்டியனுக்கும் வினோத்குமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாண்டியன் சுமார் ரூ.1.45 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி விற்பனை செய்துள்ளார். இதையறிந்த வினோத்குமார், அவரை அணுகி சொகுசு கார் வாங்க தனக்கு ரூ.30 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பாண்டியன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வினோத்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் சென்று பாண்டியனை கொலை செய்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close