கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பாஜக மனு


ஆளுநரிடம் மனு அளித்த தமிழக பாஜக நிர்வாகிகள்

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மனு வழங்கினார். உடன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோர் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை தமிழக அரசின் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலை தலைமையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, ஏ.ஜி.சம்பத், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் அனந்த பிரியா, முன்னாள் பாமக எம்.பி. பொன்னுசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கும் பங்கு இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கையை ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை கள்ளச் சாராயம் குடித்த பலர் மாவட்ட மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர். ஆனால், அதனை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. திமுகவினர் மாவட்ட ஆட்சியருடன் பேசி இந்த சம்பவத்தை மறைத்திருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரை பணி மாற்றம் செய்துள்ளனர். எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுடன் அமர்ந்து பேசிய எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அந்த துறையின் அமைச்சரோ அல்லது முதல்வரோ இன்னும் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை.

திமுக அரசுக்கு மடியில் கனம் இல்லையென்றால், சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்கட்டும். திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கிறது. குற்றவாளிகள் திமுக தொடர்புடையவர்களாக இருப்பதால், சிபிஐ விசாரணை வேண்டாம் என்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரை நீக்க வேண்டும்: அண்ணாமலையின் எக்ஸ் வலைதள பதிவு: தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கை இல்லை. உடனடியாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.