[X] Close

சில முட்டாள்கள் நதிகளை இணைப்பதாக சொல்கின்றனர்: சீமான் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 11:36 am
  • அ+ அ-

என்.சுவாமிநாதன்

தூத்துக்குடியில்தான் போட்டி என முன்னமே திட்டமிட்டுக் கடந்த சில மாதங்களாகவே தொகுதிக்குள் வட்டமிட்டு கடைக்கோடி வரை தொட்டுவிட்டார் திமுக வேட்பாளர் கனிமொழி. லேட்டாக வந்ததால் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் சற்றே திணறுகிறார்!

கருணாநிதியின் மகளான கனிமொழியும் குமரி அனந்தனின் மகளான தமிழிசையும் மோதுவதால் ஸ்டார் தொகுதியாகி விட்டது தூத்துக்குடி. திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி மறைந்து தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உருவான பிறகு நடக்கும் மூன்றாவது மக்களவைத் தேர்தல் இது. இங்கே திமுகவும் அதிமுகவும் தலா ஒருமுறை ஜெயித்திருக்கின்றன. இந்த முறை தொகுதியைக் கூட்டணித் தோழனான பாஜகவுக்குத் தந்திருக்கிறது அதிமுக. நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது திமுக.

ஈர்க்கும் கனிமொழி

திமுக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பகட்டு துளியும் இல்லாமல் கடைக்கோடி தொண்டரையும், பொதுமக்களையும் கனிமொழி அணுகும் விதத்தை தூத்துக்குடி மக்கள் வெகுவாக ரசிக்கின்றனர். எம்பி-க்களின் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் இங்குள்ள வெங்கடேஷ்வரபுரத்தைத்தான் தத்தெடுத்திருந்தார் கனிமொழி. கடந்த ஓராண்டாகவே தொகுதியைச் சுற்றிவரும் அவர், அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்துக் குறைகளைக் கேட்டு வருவதுடன் தன்னால் முடிந்தவற்றை செய்து கொடுத்தும் வருகிறார். இருந்த போதும், “சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்” என திமுக சொல்வதை தொகுதியில் பெருவாரியாக உள்ள மீனவர்கள் ரசிக்கவில்லை.

தூத்துக்குடி திமுகவில் என்.பெரியசாமியின் மகள் கீதாஜீவனும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் முட்டிக்கொண்டு நிற்பது ஊர் அறிந்த செய்தி. இதில்  கீதாஜீவன் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், அனிதா தெற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவருமே தங்களது செல்வாக்கை நிரூபித்துக் காட்டுவதற்காக போட்டிபோட்டு களப்பணி செய்வது கனிமொழிக்கு யோகம்தான்!

திமுக கூட்டணியில் உள்ள வைகோவுக்கு இது சொந்த மண். அவரது சமூகத்து வாக்குகளும் இங்கு ஓரளவு இருக்கின்றன. ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ நீதிமன்றம் சென்று தடைபெற்றதும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

மிரட்டும் அமமுக

தூத்துக்குடி தொகுதிக்குள் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகள் திமுக வசமும், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன. ஏற்கெனவே அதிமுக வசமிருந்த ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதில் விளாத்திகுளம் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இரட்டை இலை இல்லாததால் அதிமுகவினரின் கவனமெல்லாம் விளாத்திகுளத்தில்தான் இருக்கிறது. இடைத் தேர்தல் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான மார்கண்டேயனும் சுயேச்சையாக களமிறங்கியிருப்பதால் அதிமுக முகாம் கவலை படர்ந்து கிடக்கிறது. இந்தத் தாக்கம் பாராளுமன்றத் தேர்தல் களத்துக்கும் பரவிவிடுமோ என்ற கவலை பாஜகவுக்கு. போதாதுக்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனும் பாஜகவை மிரட்டித்தான் பார்க்கிறார்.

பயமுறுத்தும் ‘பைபிள் மினிஸ்டர்’

ஸ்டெர்லைட் போராட்டமும் அதன் தாக்கம் ஏற்படுத்திய வடுக்களும் இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில் தமிழிசை இந்தத் தொகுதியில் போட்டியிட வந்ததே தவறு என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோபியா என்ற ஆய்வு மாணவிக்கும் தமிழிசைக்கும் விமானத்தில் நடந்த மோதல் விவகாரமும் சில கிராமங்களில் இப்போது பெரிய விஷயமாகப் பேசப்படுகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார் தமிழிசை. பாஜகவுக்கு நகரப் பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பு கிராமங்களில் இல்லாததால் கூட்டணிப் பங்காளியான அதிமுகவையே அதிகம் நம்பவேண்டி இருக்கிறது. ஆனால், அதிமுகவுக்குள்ளும் ஒற்றுமை இல்லை.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக  இருந்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப் பாண்டியனை அண்மையில் அந்தப் பதவியிலிருந்து தூக்கினார்கள். அதற்குப் பதிலாக  வடக்கு, தெற்கு என மாவட்டத்தை இரண்டாகப்  பிரித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவையும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனையும் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கினார்கள். இந்த வருத்தத்தில் இருக்கும் செல்லப்பாண்டியன், “பதவி இல்லாவிட்டாலும் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கு பாடுபடுவேன்” எனப் பொதுவெளியில் பேசிவருகிறார். ஆனாலும் உள்ளடி வேலை கள் தலை தூக்கவே செய்யும் என்கிறார்கள்.

“செல்லப்பாண்டியன் வீட்டைவிட்டு வெளியில் வந்தாலே, கையில் பைபிளுடன்தான் வருவார். ‘பைபிள் மினிஸ்டர்’ என்று பெயரெடுத்த அவர் எப்படி பாஜகவுக்கு வாக்குக் கேட்பார்?” என்கிறார்கள் உள் விவகாரம் அறிந்தவர்கள். இந்தத் தொகுதியில் பிள்ளைமார் சமூகத்தினர் வாக்குகள் மட்டுமே சுமார் ஒன்றரை லட்சம் இருக்கிறது. தமிழிசையின் பெருத்த நம்பிக்கை இவர்கள்தான். பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து அனைத்து பிள்ளைமார் சங்கத்தினர் தமிழிசையை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். இதேபோல், சாத்தான்குளம், உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் பாஜகவுக்கு ஆதரவான இந்து  ஓட்டுகளும் இவருக்குக் கை கொடுக்கும். இத்துடன்,தான் சார்ந்த நாடார் இனத்து மக்களும் கட்சி கலரைக் கடந்து தன்னை கைதூக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் தமிழிசைக்கு இருக்கிறது.

கனிமொழி, தமிழிசை என இருவருமே பல விதத்திலும் பலம் பொருந்திய வேட்பாளர்களாகத் தெரிந்தாலும் திட்டமிட்ட களப்பணியால் தமிழிசையைக் காட்டிலும் சில சுற்று முன்னே போய்க்கொண்டிருக்கிறார் கனிமொழி!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close