கள்ளச் சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம்... தூய்மைப் பணியாளர் இறப்புக்கு..? - மதுரையில் முற்றுகை


மதுரை: கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும் அரசு, பணிக் காலத்தில் இறக்கும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட மரண நிவாரணம் ரூ.1 லட்சம் கூட வழங்கப்படுவதில்லை என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆதங்கப்பட்டனர்.

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் ஒரு நாளைக்கு 800 முதல் 900 டன் குப்பைகள் சேருகிறது. இந்த குப்பைகளை தினமும் அள்ளி தரம் பிரித்து உரக்கிடங்களுக்கும், வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கும் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு செல்கின்றனர். மாநகராட்சியில் 800 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 340 தொகுப்பூதிய தூய்மைப்பணியாளர்கள், 670 தினக் கூலி தூய்மைப் பணியாளர்கள் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். தினமும் காலை 6.30 மணி முதல் மாநகராட்சியின் தூய்மைப் பணி நடக்கிறது.

இப்பணி மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக நகர் முழுவதும் நடக்கிறது. முதற்கட்டமாக முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், அதன் பிறகு குடியிருப்பு பகுதிகளில் இந்த தூய்மைப் பணிகள் நடக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாள் பணிக்கு வராவிட்டால் குப்பைகள் தேங்கி, நகரமே சுகாதார சீர்கேடு அடையும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுகாதாரப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் மறுப்பதாக தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் தூய்மைப் பணியாளர்களம், சங்க மாநில பொதுச்செயலாளர் மா.அம்சராஜ் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், நிர்வாகிகள் தரப்பில் பேச்சுவார்த்தை அழைத்ததால், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதிற்கு இனங்க போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தல் ஈடுபட்ட தொகுதிப் பூதியம், தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கூறியதாவது: "ஒப்பந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது. அதனால், ஒப்பந்தப்பணியாளர்கள் மிகுந்த வேதனைகளுக்கு உள்ளாகிறார்கள். ஒப்பந்தப்பணியாளர்கள் பணிக்காலத்தில் இறந்து போனால் அவர்களுக்கு மரண நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்குவதற்கான இன்சூரன்ஸ் செய்யப்பட்டும் ஏன் இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கவில்லை. கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. ஆனால், அன்றாடமும் நகரத்தையும், அதில் வசிக்கும் மக்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது.

உடனே இறந்த தூய்மைப் பணியாளர்கள் யார், யாரென்று கணக்கெடுத்து அவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட வேண்டும். தினக்கூலி ஊழியர்கள் மரணமடைந்தால் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வாரிசு பணியாக அவர் பார்த்த வந்த தினக்கூலி பணியை வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை அவர்கள் குடியிருக்கும் வார்டுகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தில் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களின் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.93 பிடித்தம் செய்வது ஏன். அதற்கான பயன் ஊழியர்களுக்கு என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், எல்சிவி வாகன ஓட்டுனர்களின் பிரதிமாதம் வழங்கக்கூடிய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற ஈபிஎஃப் பணத்திற்கான கணக்குகளை ஊழியர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பாதது ஏன்.

அதனை உடனடியாக அனுப்பப்பட வேண்டும். நிரந்தரப் பணியாளர்களை நாய் பிடிப்பதற்கு அனுப்பக் கூடாது. நாய் பிடிப்பதற்கான காண்ட்ராக்ட் விட்டு அதன் மூலம் நாய்களை பிடிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். நிரந்தரப் பணியாளர்களை மாற்று பணிக்கு அனுப்பும் எண்ணத்தை உடனே கைவிட வேண்டும். நிரந்தர பணியாளர்கள் ஒய்வு பெறும் வரை அவரவர் பார்த்து வந்த வார்டுகளில் தொடர்ந்து பணி செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம், அதனை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டும்." என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.