கள்ளச் சாராய விவகாரம்: ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம், மறியிலில் ஈடுபட்ட அதிமுகவினர் 17 பேர் கைது


ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்த போலீஸார். (படங்கள்: எல்.பாலச்சந்தர்).

ராமநாதபுரம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தைக் கணடித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். நூறுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, எம்.மணிகண்டன், முன்னாள் எம்பி நிறைகுளத்தான், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்தையா, சதன்பிரபாகர், மலேசியா பாண்டியன், மாநில மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர். திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், விற்பனை அதிகரிததுள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு இருப்பு இல்லை. அங்கு முறையான சிகிச்சையும் இல்லை என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் அதிமுகவினர்.

இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில் திடீரென சிலர் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலை கைவிட போலீஸார் அறிவுறுத்தியபோது, போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 17 பேரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து, கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் அதிமுக வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களை போலீஸார் விடுவித்தனர்.