விசாரணைக்கு பிறகே மெத்தனால் எங்கிருந்து வந்தது என தெரியும்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்


புதுச்சேரி: கள்ளச் சாராயம் புதுச்சேரியில் கிடைக்க வாய்ப்பில்லை, விசாரணைக்கு பிறகே மெத்தனால் எங்கிருந்து வந்தது என தெரியும் என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். மேலும், புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பாஜகவுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எவ்வித விரிசலும் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தரநிலையை மதிப்பீடு செய்யும் நாக் (NAAC). தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு சார்பில் பல்வேறு அளவு கோல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு "ஏ" கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறியது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த தரச்சான்றை இந்த கல்லூரி மட்டுமே பெற்று இருக்கிறது.

பேராசிரியர் எண்ணிக்கை, அடிப்படை கட்டமைப்பு, கல்வி கற்பித்தல், ஆராய்ச்சி, மாணவர்கள் ஒத்துழைப்பு உட்பட 7 அளவுகோல் அடிப்படையில் இத்தரச் சான்று தரப்பட்டுள்ளது. மின்சாரம் வாங்கும் இடத்தில் கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

மத்திய மின்துறை அமைச்சரையும் சந்திக்கவுள்ளோம். ரூ.148 கோடி பற்றாக்குறை வருகிறது. மானியம் மூலம் சரிசெய்ய யோசனையில் உள்ளோம். புதுச்சேரி மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இதுவரை உயர்த்தப்பட்ட கட்டணம் அமலாக்கவில்லை. மெத்தனாலை பொறுத்தவரை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விசாரணை நடந்து வருகிறது.முழு விசாரணைக்கு பிறகு எங்கிருந்து மெத்தனால் வந்தது என்று தெரிவிக்கப்படும். இதில் மாறுபட்ட கருத்துகளும், புது தகவல்களும் விசாரணையில் வருகிறது.

புதுச்சேரியில் மாதேஷ் பிடிபட்டுள்ளார். அவருக்கு பல்வேறு இடங்களில் முகவரி சான்று வைத்துள்ளார். அவரை புதுச்சேரியில் பிடித்ததால் இங்கிருந்து வந்ததாக சொல்கிறார்கள். இன்று மரக்காணத்தில் பிடித்துள்ளனர். முழு விசாரணைக்கு பிறகே நிலையை தெரிவிப்போம். கலால் துறை, காவல்துறை, தொழில்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். கள்ளுக்கடை, சாராயக்கடை அரசே ஏலம் நடத்துகிறது. புதுச்சேரியில் கள்ளச்சாராயம் ஏதும் இல்லை. தமிழகத்தில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் புதுச்சேரிக்கு வாய்ப்பில்லை.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் பங்கேற்கவில்லையே என்று கேட்டதற்கு, பாஜக-என்.ஆர்.காங்கிரஸுக்கும் விரிசல் இல்லை. தொடர்ந்து கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு புதுச்சேரி தலைவர் ரங்கசாமிதான். எந்த முடிவும் அகில இந்திய தலைமைதான் எடுக்கும். அமைச்சர் கவர்னர் சந்திப்பு பொதுவான விஷயம்தான். புதுச்சேரியில் வழக்கமாக உள்ளது. இது வழக்கமான நிகழ்வு. எங்களுக்குள் விரிசல் இல்லை. ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த அரசானது புதுச்சேரி வளர்ச்சிக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம்" என்றார்.