[X] Close

தமிழிசை, கனிமொழி வேட்புமனுத் தாக்கல்: ‘வெற்றி பெறுவேன்’ என இருவரும் நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:32 am
  • அ+ அ-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி யில் போட்டியிட பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன், திறந்த ஜீப்பில் ஊர்வலமாக மேளதாளம் முழங்க, பட்டாசுகள் அதிர ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். 100 மீட்டர் எல்லை கோடு வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து 3 வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட் டன. பகல் 1 மணியளவில் தனது வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், தமிழிசை தாக்கல் செய்தார். அவருடன், அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார், பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், மாவட்ட தலைவர் எம்.பாலாஜி ஆகிய 4 பேர் மட்டும் இருந்தனர்.

தமிழிசை சார்பில் 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழிசைக்கு மாற்று வேட்பாளராக பாஜக மாநில செயற்குழு உறுப் பினர் எம்.ஆர்.கனகராஜ் மனு தாக்கல் செய்தார்.

கனிமொழி மனு தாக்கல்

மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக வேட்பாளர் கனிமொழியும் நேற்று, கூட்டணி கட்சியினர் புடைசூழ திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார்.

தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் ஆகிய 4 பேரும் இருந்தனர்.

கனிமொழி சார்பில் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கனிமொழிக்கு மாற்று வேட்பாளராக திமுக விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் ரா.வேலுச்சாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இருவருமே கோடீஸ்வர வேட்பாளர்கள்

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பெயரில் மொத்தம் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து, பாஜக வேட்பாளர் தமிழிசை பெயரில் ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.

கனிமொழியின் தெரிவித்துள்ள விவரம்: என் மீதான 6 குற்ற வழக்குகளில் 2 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றமற்றவர் என விடுவிக் கப்பட்டுள்ளேன். 3 வழக்குகளில் இன்னும் விசாரணை முடியவில்லை. இந்த வழக்குகளில் இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை. மேலும், ஒரு வழக்கு தனிநபர் புகார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் இருந்து இதுவரை சம்மன் வரவில்லை.

ரூ.30 கோடி சொத்து

கனிமொழி பெயரில் ரூ. 21,16,57,369 மதிப்பிலான ரொக்கப் பணம், வங்கி கையிருப்பு, தங்க, வைர நகை கள், கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் உள்ளன. அவரது கணவர் அரவிந்தன் பெயரில் ரூ.3,83,223 மதிப் பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் என கனிமொழி பெயரில் மொத்தம் ரூ.8,92,20,000 மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. கணவர் அரவிந்தன் பெயரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.

மொத்தம் கனிமொழி பெயரில் ரூ.30,08,72,362 கோடி மதிப்பிலான சொத்துக்களும், கணவர் பெயரில் ரூ.13,83,223 மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. மேலும், கனிமொழி பெயரில் ரூ. 1,92,90,928 கடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழிசைக்கு ரூ. 2 கோடி

பாஜக வேட்பாளர் தமிழிசையின் சொத்து விவரம்: தமிழிசையிடம் கையிருப்பு ரூ. 50 ஆயிரம், 4 வங்கிக் கணக்குகளில் மொத்த இருப்பு ரூ. 5.60 லட்சம், ரூ.48,97,800 மதிப்பிலான நகைகள், ரூ. 10 லட்சம் ஆய்வ கம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஸ்கேனிங் மிஷின் உள்ளிட்ட ரூ. 1,50,07,600 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ. 50 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. தமிழிசை பெயரில் மொத்தம் ரூ. 2,00,07,600 மதிப்பிலான சொத்துகள் மற்றும் ரூ. 1.87 லட்சம் கடன் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ.2,11,50,000 அசையும் சொத்துக்களும், ரூ. 6.80 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close