[X] Close

டெபாசிட்டா? வர்த்தக முன் பணமா?


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 12:36 pm
  • அ+ அ-

ஜல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள்தான் இந்த டார்ச்லைட்டுக்கான முதல் பேட்டரி. அனிதாதான் சுவிட்ச் என்று கோவையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் கமல் பேசினார்.

முதலில், நான் ஏன் வந்தேன் என்பதை சொல்லிவிடுகிறேன். முன்பே சொல்லியிருந்தாலும் இப்போது மீண்டும் அடிக்கோடிட்டுச் சொல்லுகிறேன்.

2016 நவம்பர் 8, 2017 ஜனவரி 23, 2017 பிப்ரவரி 5, 2017 ஏப்ரல் 22, 2017 செப்டம்பர் 1, 2017 செப்டம்பர் 5, 2017 நவம்பர் 25, 2018 மே 22 ஆகிய தேதிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2016 நவம்பர் 8. பண மதிப்பு இழப்பு செய்தநாள். கருப்புப் பணமெல்லாம் வெளியே வந்துவிடும் என நம்பி, பாராட்டி ட்விட் போட்டேன். நவம்பர் 7 பிறந்தநாளுக்கான பரிசு என நினைத்தேன். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தநாள். ஏழைகளின் வாழ்வை அழித்த நாள். கையில் பணமில்லாமல், வங்கியிலும் ஏடிஎம் வாசலிலும் நிற்க வைத்த மோசமான நாள்.

ஜனவரி 23ம் தேதி. நம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். அதில் மாவோயிஸ்ட்டுகள் புகுந்துவிட்டார்கள் என்று சொல்லி, மாணவனையும் மீனவனையும் போலீஸைக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள். மாணவர்களின் உண்மையான போராட்டத்திற்கு, கருப்புச்சாயம் பூசினார்கள்.

பிப்ரவரி 5ம் தேதி. குதிரை பேரம் என்று சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தை, கூவத்தூர் பேரம் என்று சொல்லும்படி செய்த கேவலமான நாள். கூவத்தூர் எனும் ஊரின் பெயரை கேவல்படுத்திய நாள்.

ஏப்ரல் 22ம் தேதி. விவசாயிகள், டெல்லியில் 28 நாட்கள் போராடினார்கள். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாநில அரசும் செவிமடுக்கவில்லை. உயிரைவிட மானம் பெரிது என்றிருந்த தமிழக விவசாயிகளை அவமானப்படுத்திய நாள்.

செப்டம்பர் 1ம் தேதி. 12ம் வகுப்பு படித்த, அனிதா எனும் மாணவியின் டாக்டர் கனவையும் அவரின் உயிரையும் தகர்த்த துயரமான நாள். அந்த அப்பாவிப் பெண்ணை கொலை செய்த நாள். ‘அனிதா தற்கொலைதானே செய்துகொண்டாள்’ என்று கேட்கலாம். ‘சத்தமே இல்லாமல், பக்கத்தில் வராமல், சட்டத்தாலேயே கொன்று போட்டார்கள் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.

செப்டம்பர் 5ம் தேதி. பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை, பெங்களூருவில் சுட்டுக்கொன்ற அரக்கத்தனமான நாள்.

நவம்பர் 25ம் தேதி. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக, முறைகேடாக பேனர்களை இஷ்டத்துக்கு வைத்து, இதோ... இங்கே கோவையில் ரகுநாத் எனும் இளைஞர் இறந்த வேதனையான நாள். இதற்கு லாரி டிரைவர்தான் காரணம் என்று இந்த தமிழக அரசு பொய் சொல்லி, வரம்பு மீறிய நாள்.

மே 22ம் தேதி. நல்ல காற்றுதானே கேட்டார்கள். அதுவொரு குற்றமா? நூறுநாள் அறப்போராட்டம்தானே நடத்தினார்கள். ஆனால், 13 பேரை, போலீசாரைக் கொண்டு, துப்பாக்கியால் சுட்டு, கார்ப்பரேட் கம்பெனிக்கு ரத்தக்கம்பளம் விரித்த நாள்.

இவற்றையெல்லாம் கேட்டால், தேசபக்தி இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

ஜல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள்தான் இந்த டார்ச்லைட்டுக்கு முதல் பேட்டரி. துணிந்து நின்ற போராட்டக்காரர்கள்தான் டார்ச்லைட்டுக்கு அடுத்த பேட்டரி. அனிதாதான் டார்ச்லைட்டின் சுவிட்ச்.

‘நீட் வேண்டாம் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை’ என்று சொன்ன அதிமுக அரசும் ‘நீட் உண்டு. எழுதியே ஆகவேண்டும்’ என்று சொன்ன பாஜக அரசும் இன்றைக்கு கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்க வருகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் பற்றியும் அவர்கள் உயிர் பற்றியும் இரக்கமே இல்லாமல் இருந்தவர்கள் இன்றைக்கு கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். ஏழு பேர் விடுதலை குறித்தும் மீனவர்கள் பாதுகாப்பு குறித்தும் இலங்கை கடற்படை குறித்தும் கச்சத்தீவு மீட்பு குறித்தும் சேது சமுத்திர திட்டம் குறித்தும் தேர்தல் அறிக்கையில் பட்டியல் போடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் ஒடுக்கும் விதமாக, நம் மக்களின் குரலாக மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மக்களவையிலும் சட்டசபையிலும் குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறு கமல் பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close