கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்


அமைச்சர் ரகுபதி

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது வருந்தத்தக்கது.இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சட்டப்பேரவையில் ஏதாவது பிரச்சினை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே அதை கடந்த 2 நாட்களாக முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இல்லாத குற்றச்சாட்டுகளை அடுக்கி பேரவையை முடக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சட்டப்பேரவையில் பேச அனுமதி தரவில்லை என குற்றம்சாட்டுகிறார். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்த பின்னர் மீண்டும் அழைத்து அவர்களது கருத்து களை பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தலைவரிடம் கேட்டார். எனவே அதிமுகவுக்கு பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என்பது அப்பட்டமான பொய்யாகும்.

அதேபோல சட்டப்பேரவை தலைவரும் கூட எதிர்க்கட்சித் தலைவர் எந்த கருத்தையும் சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்றுதான் கூறினார். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்துவது எப்போதும் கிடையாது. ஆனால் கேள்வி நேரத்தை வேண்டுமென்றே கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேரவை தலைவரின் இருக் கையையும் முற்றுகையிட்டனர். இருந்த போதும் அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதே தவிர வாய்ப்பு மறுக்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதற்கு சிபிஐ விசாரணை. இதற்குமுன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பண்ருட்டியில் நடந்த சம்பவத்துக்கு சிபிஐ விசாரணையா நடத்தினர், அன்றைக்கு நீதி விசாரணை கமிஷன் அமைத்தார்களா, ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு திமுக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு ஏற்பாடு செய்ததுடன், கமிஷன் அமைத்தும், உடனடியாக நிவாரணத்தையும் வழங்கியுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவர் அடித்துக் கொல்லப்பட்டதை முதல்வராக இருந்த பழனிசாமி மறைக்கப் பார்த்ததால், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணைகோரியது. ஆனால் இன்றைக்கு நாங்கள் எதையும் மறைக்க வில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.