[X] Close

மக்களவை தேர்தலை முன்னிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிவைப்பு


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 07:25 am
  • அ+ அ-

சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 48-லிருந்து, 144 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 16 இடங்களில் நேற்று தொடங்கியது. வியாசர்பாடி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் பங்கேற்று, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ள 3 மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் 24 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி தொடங்கி யுள்ளது. மேலும் 3 கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இம்மாவட்டத்தில் 3 ஆயிரத்து 757 வாக்குச்சாவடிகள், 72 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பயன்படுத்துவதற்காக 10 ஆயிரத்து 796 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5 ஆயிரத்து 298 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் 6 ஆயிரத்து 548 விவிபாட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்த வாக்குச் சாவடிகளில் 333 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 157 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 68 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 38 லட்சம் ரொக்கம், 13 கிலோ தங்கம், 1950 செல்போன்கள், 1200 மெமரி கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் தலா 3 பறக்கும் படை என 48 படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் என 48 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது பறக்கும் படைகளின் எண்ணிக்கை ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 9 வீதம் மொத்தம் 144 பறக்கும் படைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பயிற்சி முகாமில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா, வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.திவ்யதர்ஷினி, பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close