திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம்: போலீஸார் - பாஜக இடையே தள்ளு முள்ளு


திருப்பூர்: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகளுக்கு எதிராக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலை மறியலில் பாஜகவினர் ஈடுபட முயன்றதை தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றபோது, கடும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் எழுந்தன.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55 பேர் இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் 55 பேர் உயிரிழப்புக்கு, தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் குமரன் சிலை முன்பு 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் இன்று (ஜூன் 22) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தனர்.

அப்போது அவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என போலீஸார் எச்சரித்தனர். இதனிடையே காவல்துறையினரின் தடையையும் மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசுக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து தடையை மீறி பெரியார், அண்ணா சிலைகள் முன்பு மறியல் போராட்டத்தில் அமர்ந்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்ய முற்பட்டபோது, இருதரப்புக்கும் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் கூட்டத்தில் பாஜகவினர் மீது போலீஸார் கை வைத்ததாகவும், அதற்கு பாஜகவினர் அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.