கும்பகோணத்தில் டாஸ்மாக் மதுவை வாய்க்காலில் கொட்டி பாஜகவினர் போராட்டம்


கும்பகோணம்: கும்பகோணத்தில் டாஸ்மாக் மதுவை வாய்க்காலில் கொட்டி பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணம், காந்தி பூங்கா அருகில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் என. சதீஷ்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் சாரங்கபாணி சன்னதி தெருவில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கண்டன முழக்கமிட்டபடி ஊர்வலமாக புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.

அப்போது அவர்களை வழிமறித்த கும்பகோணம் டிஎஸ்பி-யான கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார், 4 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர். முன்னதாக, காமராஜர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் மதுபானங்களை வாங்கி அருகில் உள்ள மோடரி வாய்க்காலில் கொட்டியதுடன் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கண்டன முழக்கமிட்டனர். பாஜகவினர் டாஸ்மாக் மதுவை வாய்க்காலில் கொட்டி போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.