பேச்சிப்பாறை அருகே காட்டுயானை தாக்கி ரப்பர் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு


பேச்சிப்பாறை அருகே மயிலாறு பகுதியில் யானை தாக்கி தோட்ட தொழிலாளரி உயிரிழந்த பகுதியில் குவிந்திருந்த பிற தோட்ட தொழிலாளர்கள்.

நாகர்கோவில்: பேச்சிப்பாறை அருகே மயிலாறு பகுதியில் காட்டு யானை தாக்கி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (52). இவர் பேச்சிப்பாறை அருகே குற்றியாறு சரகத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பால் வெட்டும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் வழக்கம் போல் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். பனி மூட்டத்திற்கு மத்தியில் இவருடன் வேறு தோட்ட தொழிலாளர்களும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கோதையாறு மயிலாறு பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத மணிகண்டன் அருகில் சென்றதும் யானையை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ஓடமுயன்றார். அதற்குள் யானை அவரை துதிக்கையால் தூக்கி தரையில் போட்டு மிதித்துள்ளது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிற தொழிலாளர்கள் அலறியபடி அங்கிருந்து ஓடினர். பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், மற்றும் பேச்சிப்பாறை போலீஸார் அங்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த மணிகண்டனுக்கு மனைவி மற்றும் இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். யானை மிதித்து ரப்பர் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பேச்சிப்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.