[X] Close

தமிழகத்தில் போட்டி இல்லை; பாஜக கூட்டணியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம்: தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தகவல்


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 06:06 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் போட்டியிடவில்லை. மேலும், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதே ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 24 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 10 தொகுதிகளில் 1 சதவீதம் வாக்குகளைப் பெற்றோம். இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிட நினைத்தோம். குறைந்தது 5 தொகுதிகளில் நிற்கலாம் என கட்சி தலைமைக்கு விருப்பத்தை தெரிவித்தோம்.

தற்போது தேர்தலில் நின்றால், வாக்குகள் சிதறும். எனவே, பாஜககூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்க விரும்பவில்லை. எனவே, பாஜக, அதிமுக கூட்டணிக்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

மதவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சென்னை - சேலம் 8 வழிசாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சுட்டிக்காட்டி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வோம்.

அதிமுக தற்போது வேறுவழியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாற்று அரசியலை எதிர்பார்த்து, நாட்டு மக்கள்மோடியை பிரதமராகத் தேர்வு செய்தார்கள். ஆனால், மத்திய அரசு மக்களுக்கான நன்மை எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக போட்டியிடுவோம். ஊழல் ஒழிப்பை முக்கியமான கொள்கையாக நாங்கள் எடுத்துள்ளோம். எனவே, அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close