கள்ளக்குறிச்சி விவகாரம்: விருதுநகரில் பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு - 29 பேர் கைது


விருதுநகர்: விருதுநகரில் பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கோரியும் விருதுநகர் தேசபந்து திடலில் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சாந்தி ராகவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நடப்பதாக இருந்தது.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். அதோடு, டிஎஸ்பி-யான பவித்ரா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தேசபந்து திடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் 29 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.