தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரி நூதன போராட்டம்


கடலூர்: தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரி தெய்வீக பக்தர்கள் பேரவையினர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே இன்று (ஜூன் 22) காலை தெய்வீக பக்தர்கள் பேரவையினர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கண்டித்தும் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா தலைமை தாங்கினார்.

நகர்மன்ற உறுப்பினர் தில்லை மக்கின், காங்கிரஸ் நிர்வாகி ராஜா சம்பத்குமார், குமராட்சி ரங்கநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி மற்றும் தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தெய்வீக பக்தர்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் எம் என் ராதா கூறுகையில், தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த தமிழக அரசும் அறங்காவலர்களும் முன் வந்தும், சைவ, வைணவ பாகுபாட்டால் தொடர்ந்து நடராஜர் கோயில் தீர்த்தர் பிரம்மோற்சவம் நடத்த கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் தமிழக அரசு கோவிந்த ராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.