கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனையை தெரிவிக்க தாலுகா அளவில் ‘மக்கள் குழு’ அமைக்க கோரும் சமம் குடிமக்கள் இயக்கம்


மதுரை: “தமிழகத்தில் கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க தாலுகா வாரியாக மக்கள் குழுக்களை அமைக்கவேண்டும்” என தமிழக சமம் குடிமக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சமம் குடிமக்கள் இயக்கத் தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றியுள்ள பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பின்புறம்தான் கருணாபுரம் உள்ளது. அருகில் காவல்நிலைம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாபுரத்தில் ஒரு வீட்டில் இருந்துதான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காவல்துறை, அரசு துறைகளின் அனுமதியுடன் தான் விற்பனை நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயந்தை ஒழிக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும், லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக குற்றவாளிகளை ஊக்கப்படுத்தியதும் தான் கள்ளச்சாராய சாவு சம்பவங்களுக்கு முக்கிய காரணம். காவல் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது மட்டும் இதற்கு தீர்வாகாது. இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக நடிக்கும் தமிழக அரசு, நல்ல சாராயம் என மதுபானக் கடைகளையும், மது பார்களையும் எங்கும் நீக்கமறத் திறந்து வைத்து தமிழக மக்களை நாளுக்கு நாள் மரணம் அடையச் செய்கிறது. கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு என்பது நியாயப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது.

கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்பாக நியாயமான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க தாலுகா வாரியாக ‘மக்கள் குழுக்களை’ அமைக்கவேண்டும். அதில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் என குடிமை சமூக பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும். பூரண மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.