[X] Close

‘சந்திரகுமாரி’ சீரியல்: ராதிகாவுக்குப் பதில் விஜி சந்திரசேகர்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 19:34 pm
  • அ+ அ-

விழிப்புடன் இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள மெகா கூட்டணியும், அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளும், கூட்டணி களமிறக்கியுள்ள வேட்பாளர்களின் அணிவகுப்பும் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே பிரம்மாண்ட வெற்றி பெறும் என்பதை முன்கூட்டி சொல்லும் மக்களின் ஏகோபித்த ஆதரவு அலையையும் நினைத்து உண்மையில் மகிழ்கிறேன்.

குறிப்பாக கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், 7 பேர் விடுதலை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 வாழ்வாதார உதவி போன்ற வாக்குறுதிகள் தமிழக மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், தொண்டர்கள் விருப்பமறிந்து தலைமை உரிய முடிவுகளை காலத்தே முன்னெடுத்து, வேட்பாளர்களை களத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையில், அயராத உழைப்பால் அவர்களை வெற்றி பெறவைத்து மக்களவை உறுப்பினராக மாற்றும் பொறுப்பு இனி அதிமுக சிப்பாய்களுக்கே உரியதாகும். வரலாறு காணாத வகையில், 40 தொகுதிகளின் வெற்றியை ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்ற உறுதியை நாம் உளமாற எடுக்க வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ், கடந்த 2014- மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 44 தொகுதிகளை வென்றது. ஆனால், தமிழகம் என்ற ஒற்றை மாநிலத்தில் 39-க்கு 37 தொகுதிகளை வென்று, அத்துடன் மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களும் என இந்தியாவின் 3-வது பெரிய இயக்கமாக அதிமுகவை நிலைநிறுத்தினார் ஜெயலலிதா. நாடாளுமன்றத்தின் தரைதளத்தில் திராவிட இயக்கம் தனக்கென ஒரு தனி அலுவலகத்தை நிறுவும் உரிமை பெற்றுத் தந்தார்.

விழிப்புடன் இருந்து தேர்தல் பணிகள் ஆற்றுவதில் அதிமுக தொண்டர்களுக்கு நிகரில்லை என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் களப்பணியில் ஈடுபட வேண்டும். விரோதமும், துரோகமும், திரைமறைவு பேரம் நடத்திக்கொண்டு கட்சியின் வெற்றியை தடுக்க கங்கணம் கட்டியிருப்பதை அதிமுக தொண்டன் சுக்குநூறாக்க வேண்டும்.

அதிமுக தொண்டர்களுக்கு இனிவரும் ஒவ்வொரு மணித்துளியும் விலை மதிப்பில்லாதவை. துறை வாரியாக நாம் செய்திருக்கும் சாதனைகளை தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும். 40 மக்களவை,18 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் வெற்றியை ஒரு சேர ஈட்டுவதன் மூலம் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க வேண்டும். இதற்காக இப்போதே மடைதிறந்த வெள்ளமென சிப்பாய்கள் படை புறப்படட்டும்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close