மாநகராட்சி Vs பொதுப்பணித் துறை: மதுரை மழைநீர் கால்வாய்களை பராமரிப்பது யார்?


மதுரை: மதுரை மாநகர் பகுதியில் ஓடும் 16 மழைநீர் கால்வாய்களை பராமரிப்பதில் மாநகராட்சிக்கும், பொதுப்பணித்துறைக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து செலவதற்கு 16 மழைநீர் கால்வாய்கள் ஓடுகிறது. இந்த அனைத்து கால்வாய்களும் பொதுப்பணித்துறை வசம் உள்ளது. கடைசியாக 2006ம் ஆண்டு மாநகராட்சி, அரசிடம் நிதியுதவி பெற்று இந்த கால்வாய்களில் 13 கால்வாய்கள் மறுசீரமைத்து கால்வாயின் இரு புறமும் காங்கீரிட் அமைப்பு அமைத்தது. அதன் பிறகு இந்த கால்வாய் முழுமையாக பராமரிக்கப்படவில்லை. அதனால், கால்வாய்களில் கழிவு நீர் தேங்கியும், குப்பை, தாவரங்கள் வளர்ந்து புதர் மண்டியும் கிடக்கிறது.

இதில், கிருதுமால் நதி, வண்டியூர் கால்வாய், சிந்தாமணி ஆகிய மூன்று கால்வாய்கள் முக்கியமானது. இந்த மூன்று கால்வாய்கள்தான் மாநகரில் அதிக நீளம் செல்லக்கூடியது. அதனால், இந்த மூன்று கால்வாய்களையும், மழைநீர் வடிந்து செல்வதற்கு வசதியாக தாங்களே பராமரிக்க மாநகராட்சி கடந்த 10 ஆண்டிற்கு மேலாக தங்களிடம் ஒப்படைக்க பொதுப்பணித்துறையிடம் கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் கேட்டு வருகிறது. ஆனால், பொதுப்பணித்துறை, இது அரசின் கொள்கை முடிவு, தாங்கள் முடிவு செய்ய முடியாது எனக்கூறி வருவதாக கூறப்படுகிறது.

அதனால், பொதுப்பணித்துறை கால்வாய்களை பராமரிக்க மத்திய, மாநில அரசுகளிடம் மாநகராட்சி நிதியதவி பெற முடியவில்லை. மாநகராட்சி பொது நிதியில் இருந்துதான் செய்ய வேண்டிய உள்ளது. ஆனால், பொதுநிதி பலவீனமாக உள்ளதால், மாநகராட்சியால் மழைநீர் கால்வாய்களை தூர்வாரவோ, மறுசீரமைக்கவோ முடியாமல் மழைநீர் கால்வாய்கள் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி கூறியதாவது, "நகர் பகுதியில் ஓடும் கால்வாய்கள் அனைத்தும், மழைநீர் மட்டுமே வடிந்து ஓடுக் கூடியது. அந்த கால்வாய்கள், விவசாய பாசனத்திற்கான கால்வாயாக இருந்தால் பொதுப்பணித்துறை ஆண்டுதோறும் சீரமைக்கும். ஆனால், தற்போது அந்த கால்வாய்கள் உள்ள பகுதியில் முழுக்க நகர்பகுதியாக இருப்பதால் அதனைக் கொண்டு யாரும் பாசன வசதி பெறவில்லை. மாநாகராட்சி குப்பைகள், கழிவு நீர்தான் அந்த கால்வாய்கள்தான் ஓடுகிறது. மாநகராட்சிதான் பராமரிக்க வேண்டும் என்று கடந்த காலத்திலே பொதுப்பணித்துறை கூறிவிட்டது. அவர்கள் பராமரிக்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது." என்றனர்.

மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது, "கால்வாய்கள் எங்கள் வசம் இருந்தால் மட்டுமே நிதியுதவி பெற முடியும். அப்படியிருந்தும், பொதுநிதியில் இருந்து அவ்வப்போது தூர்வாரி கொண்டுதான் இருக்கிறோம். தற்போதும் பொதுநிதியை பயன்படுத்த முடியமா? அரசிடம் பெறலாமா? என ஆலோசிக்கிறோம்." என்றார்.