[X] Close

ஆரணி மக்களவைத் தொகுதி


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 10:13 am
  • அ+ அ-

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுக்கு உதவிய அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீஸார் யார் என சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே இளம் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீஸார் விசாரித்தாலும், தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் இல்லங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். கைதான நபர்கள் மீது மேலும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளனவா என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் தரப்பில் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல், காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீஸார், மாநகராட்சி எல்லைக்கு அருகே உள்ள புறநகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர். திருநாவுக்கரசிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்த 4 நாள் காவல் விசாரணை காலக்கெடு இன்றுடன் முடிகிறது. வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததால், திருநாவுக்கரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது எனவும் தகவல் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னரே இந்த விவகாரம் வெளியே வந்தபோது, அரசியல் பிரமுகர்களின் உதவியால் தப்பியதாகக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசுக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்கள், காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தாக்குதல் எச்சரிக்கை

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை அவரது வீடு, துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பண்ணை வீடு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், அவரை அங்கு அழைத்துச் சென்றால், அப்பகுதி மக்களால் திருநாவுக்கரசு தாக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் உளவுத் துறையினர் எச்சரித்தனர். இதனால் திருநாவுக்கரசை சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கும் முடிவை தற்காலிகமாக சிபிசிஐடி போலீஸார் கைவிட்டுள்ளனர்.

வீடியோவை பகிர கூடாது

பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் முகநூல், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் பரவியது குறித்தும், பரப்பிய நபர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைதானவர்களின் முகநூல் நண்பர்கள் பட்டியலில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close