ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு இழப்பீடு: நாமக்கல் ஆட்சியர் பதிலளிக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


பிரதிநிதித்துவப் படம்

நாமக்கல்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் எஸ்.பி.புதூரைச் சேர்ந்தவர் சுஜாதா (42). இவரது மகளான பள்ளி மாணவி கலையரசி, மகன் பூபதி ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில், நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிக்கன் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து குடும்பத்துடன் வீட்டில் சாப்பிட்டனர்.

இதன் பின்னர் கலையரசி, பூபதி, அவர்களது தாயார் சுஜாதா என அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி கலையரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கலையரசி, பூபதி ஆகியோர் உணவகத்தில் பார்சல் வாங்கிய அன்றைய தினம் அதே உணவகத்தில் சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர் உள்பட 43 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடததப்பட்டது. விசாரணையில், அந்த உணவகத்தினர் தரம் குறைந்த உணவை தயாரித்து வழங்கியதே கலையரசியின் இறப்புக்கும் மற்றவர்களின் உடல்நலம் பாதிப்புக்கும் காரணம் என தெரியவந்தது. இந்நிலையில், மாணவி கலையரசியின் தாயார் சுஜாதா, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனது மகள் உயிரிழப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்பு அலுவலரும், உணவு பாதுகாப்பு சட்டப்படி தரமான உணவு வகைகள் உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கவனிக்கத் தவறிவிட்டனர். எனவே, மகள் கலையரசியின் இறப்புக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். மேலும், அதே உணவகத்தில் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் 43 பேரும், தமது மகளைப் போல சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால், உடல் நலன் பாதிக்கப்பட்டனர். ஒரே மாதிரியான பாதிப்பு என்பதால் தமக்கு இழப்பீடு வழங்குவதைப் போல அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலையரசியின் தாயார் கோரி இருந்தார்.

கலையரசியின் தாயார் தனக்கு மட்டுமல்லாது தன்னைப் போல் பாதிக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இழப்பீடு கேட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை பொதுநல வழக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் ஜூலை 19-ம் தேதியன்று, உணவக உரிமையாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று உத்தரவிட்டுள்ளனர்.