பல்லடம் அருகே பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு


திருப்பூர்: பல்லடம் அருகே பயன்பாட்டில் இல்லாத 60 அடி கிணற்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிந்தான்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் அக்ரி காலனி பகுதியில் வசித்து வருபவர் குமரேசன். இவர் ராணுவத்தின் பணியாற்றுகிறார். இவரது மனைவி பிரின்சி. இவர்களர்து சஞ்சய் (7) சஞ்சய் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து மாலை தனது நண்பர்களுடன் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் பயன்பாட்டில் இல்லாத 60 அடி கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி சிறுவன் சஞ்சயை உயிருடன் பத்திரமாக மீட்டனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் சஞ்சய் உயிரிழந்தான்.

இதற்கு முன்பும் அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் அந்தக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். தற்போது ஐந்தாவதாக சிறுவன் சஞ்சயின் உயிரையும் அந்தக் கிணறு பறித்திருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.