தமிழகத்தை காவிரி மேலாண்மை ஆணையம் வஞ்சிப்பதாக தஞ்சையில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: தமிழகத்தை வஞ்சிப்பதாக காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஜூன் 20-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் முடித்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மழை பொழிந்து அணைகளில் தண்ணீர் இருந்தும் குடிநீருக்கு கூட தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். பற்றாக்குறை கால பங்கீடு படி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை வஞ்சிக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்காத மத்திய அரசை கண்டிப்பதுடன் காவிரி நீரின்றி குறுவை சாகுபடி மகசூலை இழந்துள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.