கள்ளச் சாராய மரணங்களை விசாரிக்க ஆணையம் முதல் யுஜிசி நெட் தேர்வு ரத்து விவகாரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கள்ளச் சாராய உயிரிழப்பு - விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு: கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

> கள்ளக்குறிச்சி சம்பவம் | தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் மற்றும் மாஞ்சோலை விவகாரங்கள் பற்றி விவாதிக்க அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

> முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்: “கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளச் சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளச் சாராய விற்பனைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இல்லையெனில் இவ்வளவு துணிச்சலாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறுமா?. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். வாக்களித்த மக்களோ, நாட்டு மக்கள் மீதோ அவருக்கு கவலை இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், கள்ளச் சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார்.

இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச் சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

> கள்ளக்குறிச்சி சம்பவம் அரசு அலட்சியத்தை காட்டுகிறது - விஜய்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

> திமுக அரசை கண்டித்து 22-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்: “தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> கேஜ்ரிவால் ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு: மதுபான கொள்கை வழக்குடன் தொடப்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதேபோல், மருத்துவப் பரிசோதனையின் போது தனது மனைவி சுனிதாவை காணொலி காட்சி மூலம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுமீதான உத்தரவினையும் ஒத்துவைத்துள்ளது.

> நீட் தேர்வு தாள் கசிவு உண்மை - கைதானவர்கள் வாக்குமூலம்: நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடு விவகாரத்தில் புதிய திருப்பமாக இந்த விவாகரம் தொடர்பாக பிஹாரில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு தேர்வர்களும் தேர்வுக்கு முன்பாக தங்களுக்கு வினாத்தாள் கிடைத்தது என்று போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனிடையே, இந்த நீட் தேர்வு தாள் விவகாரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் உதவியாளருக்கு தொடர்பு இருப்பதாக பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

> இடஒதுக்கீட்டை 65% உயர்ததும் பிஹாரின் நடவடிக்கைக்கு தடை: பிஹார் அரசுக்கு பெரும் பின்னடைவாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்திய நடவடிக்கைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தடைவிதித்துள்ளது. கடந்த ஆண்டு மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

> யுஜிசி நெட் தேர்வு ரத்து, மத்திய அரசு மீதான எதிர்க்கட்சிகள் சாடல்: ‘யுஜிசி நெட் -2024’ தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து வந்த தகவலை அடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை இரவு தெரிவித்தது. இந்நிலையில் இது குறித்து தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

"பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நிறைய கலந்துரையாடி வருகிறார். எப்போது அவர் ‘நீட் பே சார்ச்சா’ குறித்து பேசுவார்? யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது லட்ச கணக்கான மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. இது மோடி அரசின் தோல்வியை சுட்டுகிறது" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

> நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை சென்ற 90 இந்தியர்கள் உயிரிழப்பு: கடும் வெப்பத்தின் தாக்கத்தால் நடப்பு ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தினால் சுமார் 645 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.