பாதுகாப்பு பிரிவில் ஆய்வு செய்து ஜூன் 28-க்குள் அறிக்கை சமர்பிக்க ரயில்வே கோட்டங்களுக்கு உத்தரவு


ரயில் | மாதிரி படம்

சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் சிக்னல் தொழில்நுட்பம், ரயில் ஓட்டுநர்கள் சந்திக்கும் அசாதாரண நிலை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்து ஜூன் 28-ம் தேதிக்குள் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 17-ம் தேதி சிக்னலுக்காக காத்திருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின் பகுதியில் அதேபாதையில் வந்த சரக்கு ரயில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மனிதபிழை காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹா தெரிவித்திருந்தார்.

இந்த விபத்தினைத் தொடர்ந்து, ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் சிக்னல், பாதை உள்பட ரயில்வே பாதுகாப்பு பிரிவுகளில் ஆய்வு செய்ய ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் சிக்னல் தொழில்நுட்பம், ரயில் இயக்குவதில் ஓட்டுநர் சந்திக்கும் அசாதாரண நிலை ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்து, ஜூன் 28-ம் தேதிக்குள் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது உள்பட பல்வேறு பாதுகாப்பு விசயங்களை மேற்கொள்ள கோட்டங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிக்னல் தொழில்நுட்ப பிரிவுகளில் முழுமையாக ஆய்வு நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் இயக்கத்தின்போது, அசாதாரண நிலைகள் இருந்தால் ரயில் ஓட்டுநர் பிரிவுக்கான ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். ரயில் இயக்கும்போது, பாதை மற்றும் சிக்னல் ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினை இருந்தால் தெரிவிக்கலாம். இது தொடர்பாக பாதுகாப்பு அறிக்கை ஜூன் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, பாதுகாப்பு மேம்பாடு குறித்து ரயில்வே பணியாளர்களிடம் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.