[X] Close

‘ரெண்டு பொண்ணுக்கு அப்பாவா கேக்கறேன்; என்ன செய்யப்போறீங்க சி.எம்?’ - கமல் உருக்கமான வீடியோ பதிவு


pollachi-kamal

கமல்ஹாசன்

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Mar, 2019 09:43 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

பொள்ளாச்சி கொடூரத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் கமல் தன் ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ‘அதில் ரெண்டு பொண்ணுக்கு அப்பாவா கேக்கறேன். என்ன செய்யப்போறீங்க சி.எம்.?’ என்று தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வருமாறு:

’அந்தப் பொண்ணு அலறுன குரல் கேட்டதிலேருந்து மனசு பதறுது. என்ன ஒரு பதினெட்டு, பத்தொம்பது வயசு இருக்குமா? அந்தப் பொண்ணோட குரல்ல இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன்னு கூட்டிக்கிட்டு வந்தவன், தன்னைக் காப்பாத்திக் கூட்டிட்டுப் போயிடமாட்டானாங்கற தவிப்பு... கண்ணை மூடுற ஒவ்வொரு நொடியும் திரும்பத் திரும்ப காதுல கேக்குது.

நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து, ஊரு ஒலகமே ஒண்ணாத் திரண்டு எதிர்த்தப்ப, தமிழக முதல்வர் ஒரு அறிக்கையை விடுறாங்க. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் அப்படின்னு சொன்னாங்க. அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்ற இந்த அரசாங்கம், எப்படி இவ்வளவு கவனக்குறைவாவும் மெத்தனமாகவும் இருக்கமுடியுது.

பெண்ணைப் பெத்த எல்லாருக்குமே பதறுதே! உங்களுக்குப் பதறலையா?

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு சொல்றதுல இருக்கிற மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை இந்த அரசாங்கம் உறுதியாகத் தரும்னு மக்கள்கிட்ட சொல்றதுல இல்லியே. ஏன்?

வழக்கை விசாரிக்கிற எஸ்.பி. புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தவறுதலாகச் சொல்லிட்டாராம். சரி அதைவிடுங்க. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாதுங்கற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலுக்கு எதிரா, அவர் செயல்பட்டாலும் அரசாங்கம் அமைதியாவே இருக்கு. அடுத்த ரெண்டுநாள்ல, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ, வெளியே வருது. எப்படி?

குற்றவாளிகள் வீடியோக்களை அழிச்சிட்டதா காவல்துறை சொல்லும்போது, இந்த வீடியோ எப்படி வெளியே வந்துது? முதல்ல வந்ததே... அந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ...அது எப்படி வெளியே வந்துச்சு? யார் வெளியிட்டது? என்ன காரணம்?

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை, பாக்கெட்ல போட்டோவா வைச்சிருக்கிற நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்காக என்ன பண்ணியிருக்கீங்க?

நான் சொல்லட்டுமா? தன்னுடைய எதிர்ப்பை, கோபத்தைப் பதிவு பண்ண வந்த மாணவர்களை, பலவந்தமா அப்புறப்படுத்திருக்கீங்க. பெண்களை, வன்முறையை உபயோகப்படுத்தி பயமுறுத்த முயற்சி பண்ணியிருக்கீங்க. நேர்மையான வழில, நியாயமான கோபத்தை பதிவு பண்ண வந்த  பெண்கள்கிட்ட, முறைதவறி நடந்துக்கிட்ட இந்தக் காவல்துறையா எங்க பெண்களின் பாதுகாப்பை உறுதிபண்ணப் போவுது அப்படின்னு எங்க பொண்ணுங்க கேக்கறது உங்களுக்கு கேக்கலையா மிஸ்டர் சி.எம்? இந்தக் கேள்வியெல்லாம் உங்களுக்கு.

பேரைச் சொல்றீங்க, வீடியோவை விட்டுடுறீங்க. ஏன் இப்படி நடக்குதுன்னு போராட்டம் நடத்த வர்ற பெண்களை, போலீசை விட்டு அடிக்கிறீங்க. ஆனா உங்க ஆட்சி, ஒரு பெண்ணின் பெயரால்தான் நடக்குதுன்னு நீங்க சொல்றீங்க.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா கேக்கலை. ரெண்டு பொண்ணோட அப்பாவாக் கேக்கறேன். என்ன பண்ணி, இந்தத் தப்புகளுக்கான பரிகாரம் பண்ணப் போறீங்க? எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க வெளியே வரக்கூடாதுன்னு வீடியோவை வெளியிட்டு மிரட்டுறீங்களோனு பயப்படுற சகோதரிகளுக்கு, என்ன பதில் சொல்லப்போறீங்க?

கட்சிப் பாகுபாடுகள் எல்லாத்தையும் தாண்டி, இந்தக் கொடூரமான காரியத்தைச் செஞ்சவங்க மேல இந்த அரசாங்கம் எடுக்கப்போற நடவடிக்கை, நீங்க கொடுக்கப் போற தண்டனை மட்டுமில்ல! பெண்களுக்கு எதிரான கொடுமையை எவனாவது செஞ்சா, அரசாங்கம் விடாதுங்கற நம்பிக்கையும்தான்! எப்போ செய்யப்போறீங்க? இன்னும் எதுக்காகக் காத்துக்கிட்டிருக்கீங்க? எலெக்‌ஷன் முடியட்டும்னு காத்துக்கிட்டிருக்கீங்களா?

நம்ம நாட்ல இருபெரும் காவியங்களா கருதப்படும் மகாபாரதமும் ராமாயணமும் ஒருபெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக ஏற்பட்ட போர்களைப் பற்றியது. தன் பொண்டாட்டிக்கு ஒண்ணுன்னாலே போருக்குப் புறப்பட்ட கடவுளர்கள் வாழ்ந்த இந்த நாட்ல, உங்க அம்மாவுக்கே ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படித் துடைக்கப்போறீங்க சாமீ?

இவ்வாறு கமல் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close