செங்கல்பட்டு நகராட்சியில் தரமற்ற கட்டுமான பணி: ஆட்சியர் எச்சரிக்கை


செங்கல்பட்டு நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அருண்ராஜ், கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் செங்கற்களை ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு: உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் செங்கல்பட்டு ஆட்சியர் ச. அருண்ராஜ் இன்று காலை முதல் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, கண் மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மருத்துவக் கல்லூரி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சமையலறை, உணவு அருந்தும் இடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சமையலறையில் சமையல் செய்யும் இடம் தூய்மையாக இல்லாமல் ஈக்கள் மொய்த்தபடி இருப்பதை கண்டு அதிருப்தி அடைந்த மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் தூய்மைப்படுத்தும் படி விடுதிக் காப்பாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து செங்கல்பட்டு நகராட்சி அனுமந்த புத்தேரி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அப்போது குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் கல்வி முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்தபுத்தேரி பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழுவில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் கட்டிடத்தினை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆயும்போது கட்டிடப் பணிகள் தரத்தில் குறைபாடு உள்ளதை கண்டறிந்த மாவட்ட ஆட்சியர் செங்கற்களை சோதனை செய்தபோது அவை தரமற்று இருப்பது தெரியவந்தது.

கட்டிடப் பணிகள் தரமற்ற இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செங்கற்களை திருப்பி அனுப்பி தரமான கட்டுமான பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகமாக அக்ஷயா பவன் உணவகத்தினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவகம், மற்றும் பணியாளர்கள் சுகாதாரமற்ற முறையிலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். என எச்சரித்த மாவட்ட ஆட்சியர் அவ்வாறு சரி செய்யாவிட்டால் சீல் வைக்கப்படும் என எச்சரித்தார். மேலும் ரூ.1000 அபராதமும் விதித்தார். இதேபோல் கடந்த ஆண்டு ஆட்சியராக இருந்த ஆ.ர. ராகுல் நாத் இதே உணவகத்தை ஆய்வு செய்து சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.