கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி முதல் மாஞ்சோலை வழக்கு அப்டேட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி அதிகரிப்பு: கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் சிலர் செவ்வாய்க்கிழமை இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, மேலும் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 27 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் என்பவரை கள்ளக்குறிச்சி போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கெனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்’ என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

> நீட் முறைகேடு: ஜூன் 21-ல் காங். நாடு தழுவிய போராட்டம்: ‘நீட் தேர்வில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடித்து வரும் அமைதியை கண்டித்தும் மாநில தலைநகரங்களில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 21-ம் தேதி நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

> தமிழகத்தில் ஜூன் 22, 23-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 22-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
23-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

> திமுக, பாமக வேட்பாளர்கள் மனு தாக்கல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தேர்தலிலிருந்து அதிமுக விலகிக் கொண்டதால் விக்கிரவாண்டியில் திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்று கூறினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இதனிடையே, பாமக வேட்பாளர் சி.அன்புமணி தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார். சமூக நீதி அடிப்படையில் இத்தேர்தலை நாங்கள் பார்க்கிறோம். ஆளும் கட்சிதான் சாதி, மதம் பார்க்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நெற்றியில் வியர்வை வரும் அனைவரும் பாட்டாளிதான். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எள்ளளவும் தகுதி இல்லை. கருணாநிதி திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. இப்போது உள்ள ஸ்டாலின் திமுகவுக்கும் சமூக நீதிக்கும் தொடர்பு இல்லை” என்று கூறினார்.

> ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பரிந்துரைகளுக்கு பாஜக எதிர்ப்பு: “தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது வேற்றுமை உருவாக காரணம் என்ன என்பதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆராய்ந்திருந்தால் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளி மாணவர்கள் இல்லை, அரசுப் பள்ளிகளின் மோசமான நிர்வாகம்தான் முழு காரணம் என்பது புரிந்திருக்கும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

மேலும், “மாணவ, மாணவிகள் திலகம் இட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கே எதிரானது என்பதை சந்துரு உணர்வாரா? மனிதனுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கு, மரத்துக்கு, கல்லுக்கு, தொழில் புரியும் கருவிக்கு, மாட்டுக்கு என நம் அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் அனைத்துக்கும் திலகமிடுவது, நம் பண்பாடு, கலாச்சாரம். பிரச்சினை திலகத்தில் இல்லை, அரசியல்வாதிகளின் கலகத்தில் தான் உள்ளது என்பதை சந்துரு கவனிக்க தவறியது தற்செயலா? அல்லது அழுத்தமா?

அப்படி அவர் மத அடிப்படையில் குறிப்பிட்டிருந்தால், தைரியமிருந்தால் கிறிஸ்தவ பள்ளிகளில் சிலுவையோ, இஸ்லாமிய பள்ளிகளில் அம்மத சின்னங்களோ இடம்பெறக் கூடாது என்று இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லவா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

> நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் திறப்பு:

பிஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார்.

> தலாய் லாமாவுடன் அமெரிக்க குழு சந்திப்பு: இந்தியா வந்துள்ள நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

> மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்கால தடை: மறுவாழ்வு வசதிகளை செய்யும் வரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவாகாரம் தொடர்பாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், வழக்கறிஞர் பினேகாஸ் வாதிடுகையில், “இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அரசு ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு போன்ற வசதியை வழங்க வேண்டும்,” என்றனர்.

பின்னர் நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இதனிடையே “மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

> தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு அனுமதி: தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது தாய்லாந்து அரசு. இதன் மூலம் இந்த வகை சட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகிறது.

> ஹஜ் புனித யாத்திரை: நடப்பாண்டு 550 பேர் உயிரிழப்பு: கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்தனர் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்து மற்றும் 60 ஜோர்டான் நாட்டு மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.