கடையநல்லூர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுகவினர் உட்பட 29 கவுன்சிலர்கள் மனு


அசம்பாவிதங்களை தடுக்க கடையநல்லூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தென்காசி: கடையநல்லூர் நகராட்சி தலைவர் மீது திமுகவினர் உள்பட 29 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் திமுக, 5 வார்டுகளில் அதிமுக, 5 வார்டுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 3 வார்டுகளில் பாஜக, தலா ஒரு வார்டில் அமமுக, எஸ்டிபிஐ, 3 வார்டுகளில் சுயேச்சை கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். திமுகவைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை பிரச்சினைகளின்றி நகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், திமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நகராட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டது.

7 நாட்களுக்கு முன்பு கூட்ட அஜெண்டாவை உறுப்பினர்களுக்கு அனுப்பாமல் அவசரமாக நடத்தப்படும் கூட்டத்தை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் திவான் மைதீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற இருந்த கூட்டம் நீதிமன்ற உத்தரவின்பேரில் ரத்து செய்யப்பட்டு, இன்று நடைபெற்றது. கூட்டத்தையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்துக்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் கோரமின்றி கூட்டம் ஒத்திவைக்கப் பட்டது. இந்நிலையில், கடையநல்லூர் நகராட்சி ஆணையரிடம் திமுக கவுன்சிலர்கள் உட்பட 29 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மனு அளித்துள்ளனர்.

அதில், ‘நகராட்சி கூட்ட அஜெண்டாவில் வருவாய்கள் மற்றும் மாமன்றதால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் செலவு சீட்டு எண்கள் வாரியாக தயார் செய்யப்படாமல் வழங்கப்பட்டு வருகிறது. மன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலே பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது. மேலும் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அஜெண்டாவில் இல்லாத பல்வேறு தீர்மானங்களை மன்ற கூட்டம் நடைபெற்ற பிறகு முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது.

அரசு ஒப்பந்தங்கள் மறைமுகமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வழங்கியும் அந்த பகுதிகளுக்கு சாலை வசதி செய்து கொடுக்காமல் நகராட்சி தலைவர் வியாபார நோக்கத்தில் வாங்கியுள்ள பிளாட்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்களை பல லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று அவர்களை பணியமர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் கூலியை முறையாக வழங்காமல் அதில் முறைகேடு நடந்துள்ளது.

சாலை, பொது சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உறுப்பினர்களின் கோரிக்கைகளை அஜெண்டாவில் சேர்க்காமல் உள்ளார். இது குறித்து பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே நகராட்சி தலைவர் மீது எஙகளுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம்.நம்பிக்கையில்லா தீர்மனத்தை அரசு விதிகளை பின்பற்றி உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவருக்கு எதிராக திமுகவினர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கேட்டு மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.